கோவை:பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆப்சென்ட் அதிகமானதால், தேர்வு எழுதியவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாவது பெற செய்ய, ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதில், 43 ஆயிரம் பேர், அரசுப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைநிற்றல் தழுவிய மாணவர்களுக்கு, ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதால், நலத்திட்ட பொருட்கள் வழங்குவதில், நிதி மோசடி ஏற்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், தேர்ச்சி சதவீதமும் குறைந்தால், மேலும் சிக்கலாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாவது மாணவர்கள் பெற, பயிற்சி வழங்குமாறு ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'செய்முறை பாடங்களுக்கு கருத்தியல் தேர்வில் குறைந்தபட்சம், 15 மதிப்பெண்களும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு குறைந்தபட்சம், 25 மதிப்பெண்களும் பெற்றால், தேர்ச்சியடையலாம்.
ஆனால், ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம், 20 பாடங்களையாவது மாணவர்கள் படிக்க வேண்டும். ப்ளூ பிரிண்ட் இல்லை. ஆசிரியர்களால் முக்கிய பகுதிகளை, கணிக்கவே முடியாது. வினாவங்கி வழங்கப்படவில்லை.
இதனால் தான், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் திணறுகின்றனர். அதிக பாடங்கள் இருப்பதால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், வகுப்பு கையாள முடியாமல் சிரமப்பட்டோம். இதனால், கடின பாடங்களுக்கு, மீண்டும் விளக்கமளிக்க அவகாசம் இல்லை.
இச்சூழலில், முழு சிலபசை மாணவர்கள் எதிர்கொள்வதால், தேர்ச்சி சதவீதம் குறையலாம். எனவே, தேர்வுக்கு இடையே விடுமுறை நாட்களில், கல்வியில் பின்தங்கியோருக்கு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.
Advertisement