கோவை:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், அடிப்படை கல்வியறிவு பெற்றவர்களுக்கு நேற்று, அரசுப்பள்ளிகளில் தேர்வு நடந்தது.
அடிப்படை எழுத்தறிவு பெறாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை, எழுத, படிக்க வைக்க கொண்டு வரப்பட்டதே, புதிய பாரத எழுத்தறிவு திட்டம். மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டில், கடந்தாண்டில் அமல்படுத்தப்பட்டது.
அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 2027ல், எழுத, படிக்க தெரியாதவர்கள் இல்லாத நாடாக மாற்ற, இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கொண்டு, அரசுப்பள்ளிகளில் வகுப்பு கையாளப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 20 ஆயிரத்து 995 பேர், இத்திட்டத்தில் எழுத்தறிவு பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு நேற்று, அரசுப்பள்ளிகளில் தேர்வு நடந்தது. காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை, 5:00 மணி வரை தேர்வு நடந்தது. 98 சதவீதம் பேர் பங்கேற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.