-நமது நிருபர்-
மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தில், முதல் பகுதியில் ரோடு போடுவதற்கான டெண்டரில் மூன்று நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. ஒரு வாரத்துக்குள் நிறுவனம் தேர்வு செய்யப்படும் என்பதால், அடுத்த மாதத்தில் பணிகள் துவங்கும் வாய்ப்புள்ளது.
கோவை நகருக்கென்று முழுமையான 'ரிங் ரோடு' இல்லை. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 2010ல்தி.மு.க., ஆட்சியில், மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில், இத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால்பத்தாண்டுகளாக பணி துவங்கவில்லை. நிலம் கையகப்படுத்தவும் தாமதமாகவே நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த ரோடு,பாலக்காடு ரோட்டில் மைல்கல் அருகே துவங்கி, சிறுவாணி ரோடு, மருதமலை ரோடு, தடாகம் ரோடு ஆகியவற்றைக் கடந்து, மேட்டுப்பாளையம் ரோட்டில் கூடலுார் அருகே முடிவடையும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவில் தாமதம்
கடந்த ஓராண்டுக்கு முன்பே, ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால், டெண்டர் விடப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது வரையிலும், 80 சதவீத நிலத்துக்குக் கூட,பத்திரப்பதிவு முடியவில்லை.
ஆனால் முதலில் உள்ள ஐந்தாறுகி.மீ., துாரத்துக்கான நிலம், கையகப்படுத்தப்பட்டு விட்டதால், முதல் பகுதி ரோடு அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையால் டெண்டர் விடப்பட்டது.
கடந்த 16ம் தேதி வரை, டெண்டர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 17ம் தேதியன்று பிரிக்கப்பட்டன. மொத்தம் மூன்று நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
தொழில்நுட்ப ரீதியாகவும், தொகை அடிப்படையிலும் இவற்றில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதும், 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்படும்.
அடுத்த மாதம் பணி
இதனால் ஏப்ரல் இறுதிக்குள் பணிகள் துவங்கும் வாய்ப்புள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக வெறும் அறிவிப்பாக இருந்த மேற்கு புறவழிச்சாலைப் பணிகள், விரைவில் துவங்கவிருப்பது, கோவை மக்களிடம் மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
முதல் பகுதியில் ரோடு அமைக்க,மதுக்கரை, சுண்டக்காமுத்துார், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் மற்றும் மாதம்பட்டி ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில், 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோடு, 85 அடியிலிருந்து 98 அடி வரை அகலமுடையதாகவும், 13 அடி அளவுக்கு 'சென்டர் மீடியன்' உடனும்அமைக்கப்படும். முதல் பகுதியில், இரண்டு இடங்களில் சுரங்கப்பாதை பாலம் கட்டப்படவுள்ளது. இந்தப் பணி முடிவதற்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகும்.
அதற்குள், இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகளில் ரோடு அமைக்கும் பணியும் துவங்கிவிடும். எப்படியும் நான்கு ஆண்டுகளுக்குள், இந்த பை-பாஸ் ரோடு அமைக்கப்பட்டு விடுமென்பதே, இப்போதுள்ள நம்பிக்கை.
ரோடு அமைக்க,15 வருவாய் கிராமங்களில் அரசு நிலம் 57 ஏக்கர் தவிர, 361 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ரோடு அமைக்க647 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு அனுப்பப்பட்டது.மொத்தம் மூன்று பகுதிகளாகப் பிரித்து, இந்த பணி நடக்கவுள்ளது. பாலக்காடு ரோட்டிலுள்ளமைல்கல்-சிறுவாணி ரோடு செல்லப்பம் பாளையம் வரையிலான, 11.8 கி.மீ., துாரத்துக்கு 210 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.