அண்ணா நகர்: அண்ணா நகர் மண்டலத்தில் 15.5 ஏக்கர் பரப்பில், டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா, அண்ணா நகருக்கு மட்டுமல்லாமல், சென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வருகிறது.
இங்குள்ள 'டவர்' எனப்படும் கோபுரம், 138 அடி உயரம் உடையது. கடந்த 1968ல், கோபுர பூங்கா துவங்கியது முதல், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில், இந்த கோபுரத்தின் வாயிலாக, மத்திய சென்னையை முழுமையாக பார்க்க முடிந்தது. கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்ததால், 2011ல் கோபுரத்தின் மேல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, கோபுரத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது.
இதையடுத்து, 89 லட்சம் ரூபாய் மதிப்பில் டவர் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வாரம் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
பூங்கா சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்கு பின், டவர் பூங்கா மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.