கியூட்டோ: தென் அமெரிக்க நாடுகளான ஈகுவடார் மற்றும் பெருவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதில், 15 பேர் பலியாகினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈகுவடார் மற்றும் பெருவின் வடக்கு பகுதிகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டாலும், எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
ஈகுவடாரின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்தன. வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டன. இதையடுத்து மீட்புப்படையினர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஈகுவடாரில் மட்டும் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர், ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பெருவின் வடக்கு பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின.