வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: அரசியல் தலைவர்கள் பலருக்கு, ஒரு வித பழக்கம் உண்டு... தாங்கள் பேசும் கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் கூடியிருந்தால், உடனே குஷியாகி விடுவர். பொதுமக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக என்னவெல்லாமோ பேசுவர்; முடியாத விஷயத்தையும், முடித்து விடுவது போல வாயால் வடை சுடுவர்.
கடந்த, 1962ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 'வடவர்கள் நம்மவர்கள் அல்ல; அவர்கள் நல்லவர்கள் அல்ல; அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு' என்று பேசினார். ஆனால், ராஜ்யசபா எம்.பி.,யாகி, பார்லிமென்டில் போய் அமர்ந்ததும், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
அதேபோல, எம்.ஜி.ஆர்., ஒரு முறை, 'மாநில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்' என்றார்; பின், அதை மாற்றிக் கொண்டார். இதெல்லாம், கூட்டத்தை பார்த்தவுடன், அவர்களுக்கு ஏற்பட்ட 'அலர்ஜி'யால் பேசியதாகும். ஆனால், ராஜாஜி, ஈ.வெ.ரா., காமராஜர் போன்ற முதிர்ந்த தலைவர்கள், இப்படி ஒருபோதும் பேசியதில்லை; என்றும், எங்கும் ஒரே பேச்சு தான்.
![]()
|
இப்போது தமிழகத்தில், 'மைக் தலைவர்' என, சிலரால் செல்லமாக அழைக்கப்படும், நாம் தமிழர் கட்சி சீமானும், கூட்டத்தை பார்த்தவுடன் மிரண்டு போய், என்னன்னவோ பேசுகிறார். வட மாநிலத்தவரை வேலைக்கு வைப்பது தவறு என்று குதிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்; நிறைய சம்பாதிக்கின்றனர்.
அப்படி இருக்கையில், ஏழை வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்தால் பாவமா? வடமாநிலத்தவர்குறைந்த சம்பளம், நீண்ட நேரம் வேலை என்றாலும், சந்தோஷமாக ஏற்று பணியாற்றுகின்றனர்; அதை ஏன் கெடுக்க வேண்டும்.
திரைப்படத் தொழிலில் எத்தனையோ வடமாநிலத்தவர் நடிகர் - நடிகையராக, நடன இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சீமான் எதிர்ப்புத் தெரிவிப்பாரா? நமக்கு துபாயில், அமெரிக்காவில்அதிக சம்பளம்; வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் அதிக சம்பளம்... அவ்வளவு தான்.
சீமான் போன்றவர்களின் பேச்சை, பெரிய நடிகர்கள் கண்டிக்க வேண்டும். ஒரு பக்கம், 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்று கூறி விட்டு, மறுபக்கம் ஏழைத் தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது எப்படி நியாயமாகும். எனவே, வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில், 'ஹீரோயிசம்' காட்டுவதை, சீமான் கைவிட வேண்டும்.