மசாய் மாரா
உலகில் உள்ள ஒவ்வொரு காட்டுயிர்( வைல்டுலைப்) போட்டோகிராபர்களும் போகவிரும்பி கனவு காணும் தேசம்.

அந்த கனவை சமீபத்தில் நனவாக்கி திரும்பியிருக்கிறார் சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த போட்டோகிராபர் ரவி ரகுநாதன்.
அப்படி என்ன அதிசயம் அங்கு நடக்கிறது என்கிறீர்களா?
பக்கத்து தெருவிற்கு கூட நடந்து செல்லக்கூட நாம் அலுத்துக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் பல ஆயிரக்கணக்கான விலங்குகள் ஐநுாறுக்கும் அதிகமான கிலோமீட்டர் துாரத்திற்கு இடம் மாறி செல்லும் அதிசயம்தான் இங்கு நடக்கிறது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் செரங்குட்டி என்று ஒரு விலங்குகள் சரணாலயம் உள்ளது.இங்கு ‛வைல்ட் பீஸ்ட்' எனப்படும் ஒருவகை காட்டு மாடுகள்,வரிக்குதிரைகள்,மான்கள்,ஒட்டகச்சிவிங்கிகள்,சிங்கங்கள்,புலிகள்,சிறுத்தைகள் என எல்லாவகை விலங்குகளும் நீ்க்கமற நிறைந்து இருக்கிறது.

இவற்றில் காட்டு மாடுகளும்,வரிக்குதிரைகளும்,மான்களும் தங்களின் உணவுப்பற்றாக்குறையை சமாளிக்க மசாய் மாரா என்ற இடத்திற்கு கூட்டம் கூட்டமாக நடந்து சென்று சில மாதங்கள் முகாமிட்டு பின் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்புகின்றன.இது ஜீலை மாதத்தில் துவங்கி அக்டோபர் மாதம் நிறைவு பெறுகிறது.
மசாய் என்பது அந்த இடத்தில் வாழும் பழங்குடி இன மக்களின் பெயர், மாரா என்பது அவர்கள் பேசும் மொழி. எனவே இந்தப் பழங்குடி மக்களைப் போற்றும் விதமாக அந்த இடத்துக்கு மசாய் மாரா என்று பெயர்
காட்டுப்புழுதியை கிளப்பியபடி கண்ணுக்கெட்டிய துாரத்திற்கு மாடுகளும் வரிக் குதிரைகளும் மான்களும் வறண்ட காட்டுப் பகுதியை கடந்து செல்வது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது இதைப்பார்ப்பதற்காகவே பல ஆயிரக்கணக்கான போட்டோகிராபர்கள் இங்கு திரளுகின்றனர்.

காட்டு மாடுகளின் இந்த பயணம் ஒன்றும் அவ்வளவு இனிமையானதோ,எளிமையானதோ கிடையாது உயிரை வளர்க்க உயிரை பணயம் வைத்துதான் செல்கின்றன.வழியில் குறுக்கிடும் காட்டு ஆறுகளை இவைகள் கடக்கும் போது பிடித்து உண்பதற்காகவே பல நுாறு முதலைகள் ஆற்றுக்குள் காத்திருக்கும், அவைகளுக்கு தங்கள் இனத்தை பலி கொடுத்தபடியேதான் மாடுகள் தங்கள் பயணத்தை தொடரும்.முதலைகளுக்கு மட்டுமல்ல சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் செந்நாய் போன்ற வேட்டையாடும் விலங்குகளுக்கும் இது ஒரு கொளுத்த வேட்டைக்காலம்தான்.
முதலைகளிடம் இருந்து தப்பிப்பிழைத்து கரை ஏறியதும் ‛வா ராஜா' என்றபடி கரைகளில் காத்திருக்கும் சிங்கம் சிறுத்தை போன்ற விலங்குகள் இவைகளை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எளிதில் வேட்டையாடி புசிக்கும்.
காட்டுயிர் புகைப்பட வாழ்க்கையில் இந்த இடம் மாறுதலும்,வேட்டையாடுதலும் சிறப்பாக பார்க்கப்படுகிறது ஆகவே உலகம் முழுவதும் இருந்து இந்த சீசனில் பகைப்படக் கலைஞர்கள் இங்கு படையெடுத்துவருவர்.
முன்னாள் பாங்க அதிகாரியான ரவி ரகுநாதனுக்கும் நீண்ட காலமாக மசாய் மரா செல்லவேண்டும் என்பது ஆசை இதற்காக சென்னையில் இருந்து மசாய் மாரா சென்று வர ஒரு பேக்கேஜில் பணமும் கட்டிவிட்டார்.இந்த பேக்கேஜ் மூன்று இரவுகளும் நான்கு பகல்களும் கொண்டது. விமான கட்டணம் ஜீப் சபாரி உள்ளீட்ட எல்லா செலவுகளுக்கும் சுமார் இரண்டு லட்ச ரூபாயாகும்.

பயணம் கிளம்ப இருக்கும் போது உலகையை உறைய வைத்த கோவிட் பெருந்தொற்று துவங்கிவிட பயணம் நின்று போனது, ரவி ரகுநாதன் பயணத்தையும் பணத்தையும் மறந்துவிட்டிருந்தார் இந்த நிலையில்தான் வாங்கிய பணத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகும் நீங்கள் போட்ட திட்டம் செல்லுபடியாகும் என்று சொல்லி மசாய் மராவிற்கு அழைத்துச் சென்றனர். நண்பர்களுடன் சென்று வந்த ரவி ரகுநாதனுக்கு மிகவும் திருப்தி ஒரே ஒரு குறை என்னவென்றால் இவர்கள் சென்ற போது மசாய் மாராவிற்கே உரிய விலங்குகளின் ‛மாஸ் இடப்பெயர்வு' முடிந்து போயிருந்தது.
ஆனால் கம்பீரமே உருவான சிங்கம் வேகத்தின் எடுத்துக்காட்டான சிறுத்தை அந்த சாயும் நேரத்து ஒட்டகச்சிவங்கியின் அழகு பிரமிப்பை ஏற்படுத்தும் யானைகள் பார்க்க பார்க்க சலிப்பை ஏற்படுத்தாத பறவைகள் என்று பல காட்டுயிர்களையும் பறவைகளையும் தனது கேமிராவில் ஆசை தீர அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்.விலங்குளின் பெரும் இடப்பெயர்வைக் காண்பதற்காகவும் கென்யா மக்களின் அன்பை நுகர்வதற்காகவும் மீண்டுமொரு முறை மசாய் மாரா செல்லும் எண்ணத்திலும் இருக்கிறார்.

காட்டுயிர் சுற்றுலாவால்தான் தங்கள் வாழ்வும் நாட்டின் வளர்ச்சியும் இருக்கிறது என்பதால் காட்டையும் காட்டுயிர்களையும் மசாய் மாரா மக்கள் சிறப்பாக பேணுகிறார்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கிறது தங்கள் காட்டை நம்பி வந்தவர்களை திருப்திப்படுத்த நிறையவே உழைக்கிறார்கள், உதவுகிறார்கள்.
இவர் தான் எடு்த்த படங்களை சென்னையில் உள்ள மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியில் போட்டுக் காட்டியபோது அந்த படங்கள் ஏற்படுத்திய பிரமிப்பு என்னிடம் இன்னமும் மிச்சம் இருக்கிறது.
-எல்.முருகராஜ்.