சென்னை: வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இத்தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இன்று (மார்ச் 20) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு 'மகளிருக்கான உரிமைத்தொகை' மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் தெரிவிக்கையில், 'முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்.,15ம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு. மகளிருக்கான உரிமைத் தொகை பெறும் வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்' என அறிவித்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்ற பிற முக்கிய அறிவிப்புகள்
* தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.8,056 கோடி ஒதுக்கீடு
* மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு
* மாணவர்கள் இலவச பேருந்து பயண மானியத்துக்கு ரூ.1,500 கோடி, டீசல் மானியத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
* ரூ.77 ஆயிரம் கோடியில் 16,500 மெகாவாட் மின் திறன் கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* காற்றாலைகளின் செயல் திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை வகுக்கப்படும்.
இலவச வை-பை
* மின் தரவுகளை தானியங்கி முறையில் பெற அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும்.
* கைத்தறி மேம்பாட்டுக்கு ரூ.20 கோடியில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் நிறுவப்படும்.
* தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளில் பொதுவெளியில் இலவச வை-பை சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட 4 நகரங்களில் ரூ.410 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
* புதிதாக ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 32 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தோல் அல்லாத காலணி உருவாக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

மசூதி, தேவாலயம் சீரமைப்பு
* நாகூர் தர்காவை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
* சேலம், மதுரையில் தேவாலயங்களை சீரமைக்க நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
* சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும்.
* தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, ஓசூர், கோவையில் டெக் சிட்டி அமைக்கப்படும்.
கோயில்கள்
* நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்.
* பழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவை ரூ.480 கோடியில் மேம்படுத்தப்படும்.
* நில நிர்வாகத்தில், நம்பகமான எளிய நில பதிவேற்று முறையை கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது. இதற்காக புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்.
* ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்.
* நிலம் வாங்குபவர்களின் பதிவுக் கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.