வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக பட்ஜெட்டில், திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

வரிகள் உயர்வு:
தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவை குறித்து சட்டசபையில் பேச அனுமதி கோரினோம். தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. மின் கட்டணம், குடிநீர், சொத்து வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. வரி உயர்வு தான் திமுக அரசு தந்த பரிசு. வரி வருவாய் உயர்ந்துள்ள நிலையில், அரசின் நிதி பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது.
நீட் தேர்வு ரத்து செய்யவில்லை:
ஆனால் திமுக ஆட்சியில் அவ்வாறான பிரச்னை எதுவும் இல்லை. ஆனாலும் நிதி பற்றாக்குறை என்கின்றனர். ஏற்கனவே ரூ 1.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்; தற்போது 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாக கூறியுள்ளனர். வருவாய் அதிகரித்துள்ளது;
பெரியளவில் செலவு இல்லை; ஆனாலும், நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறுகின்றனர். நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறினார்கள்; ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளாகியும் ரத்து செய்யவில்லை. 2 ஆண்டுகளில் 2.40 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளது.
உதயநிதிக்கு நோபல் பரிசு:
நீட் தேர்வு ரத்து ரகசியம் தொடர்பாக பேசிய உதயநிதிக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும். அனைத்து மகளிருக்கும் ரூ.ஆயிரம் என அறிவித்துவிட்டு; தற்போது தகுதி வேண்டும் என்கின்றனர். குடும்பத் தலைவிகள் ரூஆயிரம் உரிமைத் தொகை பெற எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயம்?.
போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எங்களுக்கு பட்ஜெட் புத்தகம் வழங்கப்படவில்லை; அதனால் அதனை முழுமையாக படிக்க முடியவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் அமல், நிலுவைத் தொகை விடுவிப்பு குறித்து அறிவிக்காமல், அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலை

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுக.,வுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வைகோ பாராட்டு

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: சமூக நீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய 4 அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டு நாட்டிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருவதை, 2023-24ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் சுட்டிக்காட்டி இருக்கிறார். வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்து இருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடுவதை இந்த பட்ஜெட் உறுதி செய்து இருக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அறிக்கை: விடியா அரசின் விளம்பர பட்ஜெட்! திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் இல்லாமல், மக்களுக்கு விடிவே இல்லாத நிலையை ஏற்படுத்தக் கூடிய பட்ஜெட்டாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழகத்தில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.