வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, பார்லிமென்ட் துவங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும், 6வது நாளான இன்றும் (மார்ச் 20) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடமால், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை முதல் 5 நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

6வது நாளான இன்று (மார்ச் 20) பார்லி., கூடியது. அவை கூடி, சில நிமிடங்களில் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து கோஷமிட்டு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டனர். ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.