
திருமலை வெங்கடாஜலபதியின் துணைவியான பத்மாவதி தாயார் திருமலையின் கீழ் உள்ள திருப்பதி பக்கம் உள்ள திருச்சானுாரில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருமலை செல்லும் பக்தர்கள் முதலில் தாயாரை தரிசித்துவிட்டு பின்னரே பெருமாளை சந்திக்க செல்வர்

திருச்சானுாரில் மட்டுமே குடிகொண்டிருந்த பத்மாவதி தாயார் தற்போது தனது இரண்டாவது சேத்திரமாக சென்னை திநகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள வளாகத்தை தேர்வு செய்து வந்துள்ளார்.

பழம்பெரும் நடிகையான காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஜா பாண்டே ஆகிய இருவரும் திநகர் ஜிஎன்செட்டி சாலையில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக கொடுத்தனர்.

இந்த இடத்தில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்து கடந்த இரண்டு வருடங்களாக அதற்கான பணிகளில் இறங்கியது.
பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட ஐந்து கோடி ரூபாயுடன் தேவஸ்தானம் ஒதுக்கிய பத்து கோடி ரூபாய் என்று பதினைந்து கோடி ரூபாய் செலவில் கோவில் பிரமாதமாக கட்டப்பட்டுள்ளது.
மன்னர்கள் காலத்தில் எப்படி கற்கோவிலைக் கொண்டு கோவில் கட்டப்பட்டதோ அது போலவே இந்தக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் செய்யப்படும் அதே வழிபாட்டு முறைகள் இங்கும் செய்யப்படும்.