வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியின் தரம் உயர்ந்து, மனிதவளத்தை அதிகளவில் உயர்த்தும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் பேசினார்.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜி20 இளம்தூதுவர் உச்சி மாநாடு, 2023, 'உலக இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல்' எனும் தலைப்பில் நடந்தது.
இதில் மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியதாவது: இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் தான். இவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் இந்த மாநாடு இருக்கும். இந்த ஜி20 இளம்தூதுவர் உச்சி மாநாடு, 2023, மிகப்பெரிய பங்கு வகிக்க உள்ளது. இதற்கு ஜி20 என்றால் நாளிதழ்களில் மட்டுமே படித்து தெரிந்து கொள்வோம்.
ஆனால், தற்போது அந்த ஜி20 மாநாடு இந்தியாவில் நடப்பது நமக்கு பெருமைக்குரிய விஷயம். இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இந்திய தலைமையில் நடக்க உள்ள ஜி20 மாநாடு, உலகளவில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதாக அமையும்.
உலகை ஒரு குடும்பமாக கொண்டு வருவதே ஜி 20 மாநாட்டின் நோக்கம். இதில் இளைஞர்கள் முக்கியமான பங்களிப்பாளர்களாக இருப்பர். உலகளவில் உள்ள இளம் தலைமுறையினர் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். கொரோனா காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் பிற நாடுகளுக்கும் வழங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. கடந்த, ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது.
கடந்த, 2014 ம் ஆண்டுக்கு முன் குறைந்த அளவிலேயே ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இந்த ஒன்பது ஆண்டுகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டுள்ளன. தாய்மொழி கல்வியை அளிப்பது தான் தேசிய கல்வி கொள்கையின் முக்கிய நோக்கம் ஆகும். புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியின் தரம் உயரும்.
இது மனிதவளத்தை அதிகளவில் உயர்த்தும். இந்திய மக்கள் தொகையில், 65 சதவீதம் பேர், 35 வயதிற்கு கீழ் உள்ளனர். இளைஞர்கள் நம் சொத்து. இவ்வாறு அவர் பேசினார். ஜி 20 இளம் தூதுவர் உச்சி மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடந்தன.