இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு 30 வயதை எட்டுவதற்குள் தொப்பை மற்றும் அதீத உடற்பருமன் பிரச்னை ஏற்படுகிறது. 20-30 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் பணிமாற்றம் காரணமாக அவர்களது ஊர், உணவு, உறக்க நேரம் உள்ளிட்ட அனைத்தும் மாறிவிடுகின்றன. இந்த காலகட்டத்தில் பணியில் முன்னேறி அதிகம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்கள் பலர் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். 30 வயதைக் கடந்த பின்னர்தான் பலருக்கு உடல்எடை அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. இப்படியே உடல் எடை அதிகரித்தால், 40 வயதில் நீரிழிவுக்கு ஆளாகிவிடுவோம் என்கிற பயம் உண்டாகும்.
இதனையடுத்து 30 வயதைக் கடந்த இளைஞர்கள் பலர், ஜிம் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த வயதுக்குமேல் ஜிம் சென்று பயிற்சி செய்வது சாத்தியமா என சிந்திப்போரும் உள்ளனர். ஜிம் பயிற்சி மேற்கொள்ள நடுத்தர வயதினர் கூச்சப்படுவர். பெரும்பாலான ஜிம்களில் தொழில்முறை பாடி பில்டர்கள் பலர் கட்டுடலோடு ஜிம் பயிற்சி மேற்கொள்வர். இவர்களைக் கண்டதும் நாம் என்ன பயிற்சி செய்யப்போகிறோம், எந்த மாதிரியான உடை அணிவது, தவறான முறையில் பயிற்சி செய்தால் பிறர் கிண்டலாக சிரிப்பார்களே என்கிற பய உணர்வு ஏற்படும். ஜிம் செல்ல ஆர்வம் இருந்தும்கூட இந்த கூச்ச மற்றும் பய உணர்வால் இந்த ஆர்வத்தைப் புறந்தள்ளுவோர் பலர். இவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.
![]()
|
ஜிம் பயிற்சி செய்ய முதன்முதலில் ஜிம்மில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்குமே இந்த பயம் இருக்கும். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பர் என்கிற கவலையை முதலில் விடுங்கள். உங்களது இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
ஜிம் பயிற்சி செய்வது உடலை கட்டுடலாக்குவதற்காக மட்டும் அன்று. ஜிம் பயிற்சி செய்வதால் உங்கள் உடல் மட்டுமின்றி மனமும் மாறுவதை உங்களால் உணரமுடியும். அதிகளவு ஜிம் பயிற்சி செய்பவர்களுக்கு மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான எண்டோர்ஃபைன் அதிகமாக சுரக்கும். இதனால் உங்கள் மன அழுத்தம் கணிசமாகக் குறையும். எனவே ஜிம் பயிற்சி மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் என்பதை உணருங்கள்.
இன்று ஜிம்கள் பல, '30 டேஸ் சேலஞ்ச்' என்கிற பெயரில் உடல் எடையை 30 நாட்களில் குறைக்க நிகழ்வுகள் நடத்தி வருகின்றன. ஜிம் செல்வது என்பது இதுபோன்று ஓர் குறுகிய கால இலக்கு கிடையாது. இது வாழ்நாள் முழுவதும் நீங்கள் செய்யவேண்டிய பயிற்சி. நீங்கள் ஹாபி என்கிற பெயரில் 6 மாத கோர்ஸ் சேருவதுபோல ஜிம் பயிற்சியை நினைக்க வேண்டாம்.
![]()
|
ஜிம் சென்றவுடனேயே மிகப்பெரிய கனவு இலக்கை வைத்துக்கொள்வதைத் தவிருங்கள். நான் அர்னால்டு ஆகப்போகிறேன் என்கிற நினைப்பில் ஜிம் செல்லாதீர்கள். பெரிய இலக்கு வைக்கும்போது நாம் பயிற்சியில் சிறு தவறு செய்தாலும் நமக்கு அதிருப்தி ஏற்படும். நம்மால் என்ன முடியுமோ அதைச் செய்வோம் என்கிற சிறிய இலக்கை மட்டும் நிர்ணயிக்க வேண்டும். காலமே உங்களை அடுத்தடுத்த பெரிய இலக்குகளுக்குத் தயார்படுத்தும்.
அன்றாடம் ஜிம் செல்லுவதால் உங்களது வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் வேலை மீதான புத்திக்கூர்மை மற்றும் கவனம் சிறக்கும். உங்கள் கை, கால் அசைவுகள் சுலபமாகும்.
நீங்கள் ஜிம்முக்கு முதன்முதலில் செல்லும்போது உங்கள் உறவினர்கள், நண்பர்கள் சிலரே ஏளனப் பார்வை பார்ப்பர். இவற்றைப் பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து பல மாதங்கள் நீங்கள் விடாமல் ஜிம் சென்றால் இவர்களே உங்களைப் பாராட்டுவர். இவர்களும் உங்களைப் பார்த்து ஜிம் செல்ல ஆயத்தமாகவும் வாய்ப்புண்டு.
உங்களுக்குப் பிடித்த உணவுகளை டயட் என்கிற பெயரில் தியாகம் செய்யத் தேவையில்லை. உதாரணமாக உங்களுக்கு பிட்சா பிடிக்கும் என்றால் அதைச் சாப்பிடலாம். ஆனால் தினசரி பயிற்சியை சரியாகச் செய்யுங்கள்.
மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு அதனை உங்களோடு ஒப்பிடாதீர்கள். உங்களுக்கு நீங்களே போட்டி என நினைத்து பயிற்சி செய்யுங்கள்.