தமிழக அரசின் நிதியிலை அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுதிட்டம் அளிக்கப்படும் என்பது வரவேற்றக தக்கது. ஆனால் அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத்து மிகுந்த ஏமாற்றத்தினை அளித்துள்ளது என தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பதும், தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியவை. ஆனால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.
மேலும் முதல்வர் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் பக்கம்-85 ல் பத்தி 316வதாக பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர பணியாளராக பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் 50 விழுக்காடு பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற வாக்குறுதிக்கு ஏற்பவும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்று அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50 சதவிகித தொகுப்பூதிய பணிக்காலத்தினை ஓய்வூதியம் பெறுவதற்கு கணக்கிட்டு அரசானை வெளியிட கோருகின்றோம்.
காலியாக உள்ள 700க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மெல்லக் கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை நடைமுறை படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட கோருகின்றோம்.