வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்க விதிமுறைகளை வகுக்கும்படி, விமான நிறுவனங்கள் மற்றும் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
![]()
|
அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து, புதுடில்லிக்கு கடந்த ஜனவரியில் 'ஏர் இந்தியா' விமானம் வந்தது.
அதில் பயணித்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், சக பயணியான, 72 வயது பெண் மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. மது போதையில் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக புதுடில்லி போலீசார், அவரை கைது செய்தனர். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
விமான பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு விமான போக்குவரத்து இயக்குனரகமும், ஏர் இந்தியா நிறுவனமும் உரிய தீர்வு அளிக்கத் தவறி விட்டன.
இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தனி மனித சுதந்திரம், உரிமையை பாதிக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்டன. என்னுடைய உரிமை மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையும் பாதிக்கப்பட்டது.
இதுபோன்ற விஷயங்களில் ஊடகங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
![]()
|
எதிர்காலத்தில் விமான பயணங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும்போது, அதை சமாளிப்பது மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement