வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஆன்டிபயாடிக்' உடனடியாக கொடுக்க வேண்டாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![]()
|
இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, சமீபகாலமாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு எடுத்ததுமே 'ஆன்டிபயாடிக்' கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பாக, 'லொபினாவிர் - ரிடோனாவிர், இன்வெர்மெக்டின், அஸித்ரோமைசின், ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' போன்ற மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவையில்லை.
ரத்த பரிசோதனையில், அவர்களுக்கு பாக்டீரியா பாதிப்பு இருப்பது தெரியவந்தால், 'ஆன்டிபயாடிக்' கொடுக்கலாம்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு, 'பிளாஸ்மா தெரபி'யும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிராந்திய அளவில் ஏற்படும் தொற்றுகளுடன், கொரோனா தொற்றும் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
![]()
|
மிதமான அல்லது கடுமையான பாதிப்பு இருந்தால், 'ரெம்டிசிவிர்' மருந்தை ஐந்து நாட்களுக்கு கொடுக்கலாம். மிதமான மற்றும் கடுமையான பாதிப்பு தென்பட்ட 10 நாட்களுக்குள் இந்த மருந்தை தரத் துவங்கலாம்.
நோய் பாதிப்பு கடுமையாக துவங்கிய, 24 - 48 மணி நேரத்துக்குள் அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, 'டோசிலிசுமாப்' என்ற மருந்தை தரலாம். இவை, டாக்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் குறிப்புகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement