வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்-பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளரும், மத தீவிரவாத பிரசாரகருமான அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.
![]()
|
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு, காலிஸ்தான் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
கடந்த 1984ல் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், இந்த அமைப்பு ஒடுக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் சமீப காலமாக காலிஸ்தான் ஆதரவு போராட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அம்ரித்பால் சிங் தீவிரவாத பிரசாரங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக இளைஞர்களை துாண்டிவிட்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் 23ம் தேதி, தங்கள் அமைப்பைச் சேர்ந்தவரை மீட்க, அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா போலீஸ் ஷ்டேஷனை முற்றுகையிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், எஸ்.பி., உட்பட ஆறு போலீசார் காயமடைந்தனர்.
இந்நிலையில், பஞ்சாபில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள், 'ஆம் ஆத்மி அரசு தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக உள்ளது' என்றன.
இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய, அம்மாநில போலீசார் 18ம் தேதி முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாநிலம் முழுதும் வாகன சோதனை நடத்தப்பட்டு, அனைத்து சாலைகளும் சீலிடப்பட்டுள்ளன.
அம்ரித்பால் சிங்கின் சொந்த ஊரான அமிர்தசரசின் ஜல்லாபுர் கேராவில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் உறவினர் ஹர்ஜித் சிங், கார் டிரைவர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் ஜலந்தர் போலீசாரிடம் நேற்று முன்தினம் இரவு சரணடைந்தனர்.
![]()
|
அவர்கள் வந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுதும் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைய சேவை இன்று மதியம் 12:00 மணி வரை முடக்கப்பட்டுள்ளது.
அம்ரித்பால் சிங்குக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, அம்ரித்பால் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ரூகர் சிறையில் உள்ள அம்ரித்பாலின் நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.