சென்னை ;தமிழக அரசின், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை, தமிழில் வாசிப்பதற்குள், நிதியமைச்சர் தியாகராஜன் திக்கித் திணறினார். சில வார்த்தைகளை உச்சரிக்க தெரியாமல் தடுமாறினார். தமிழ் வளர்ச்சிக்கென மாநாடுகள் நடத்தியும், நிதி ஒதுக்கியும், அனைத்தும் வீணாகி போனதையே, இது அப்பட்டமாக எடுத்துக்காட்டியது. அவர் சமர்ப்பித்த பட்ஜெட்டில், ஏற்கனவே மேடைகளில் வெளியான அறிவிப்புகளே அதிகம் இடம்பெற்றன.
சட்டசபையில் நேற்று, 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசித்தபோது, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வாசித்தார். அப்போது பல வார்த்தைகளை வாசிக்க முடியாமல் திணறினார்; நிதி ஒதுக்கீட்டு விபரங்களை தமிழில் சொல்லவும் தடுமாறினார்.
சிலவற்றை தவறாக படித்தபோது, சக உறுப்பினர்கள் திருத்திக் கூறினர். அதை ஏற்று, 'மன்னிக்கவும்' எனக் கூறி, சில இடங்களில் தவறுகளை திருத்தி படித்தார். பட்ஜெட் உரையின்போது, வரவு - செலவு கணக்கு விபரங்களை தமிழில் வாசிக்கத் தடுமாறிய அமைச்சர், ஆங்கிலத்தில் சரளமாக வாசித்தார்.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
* தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு, வரும் நிதியாண்டில் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். செப்., 15 முதல் இத்திட்டம் துவக்கப்படும்
* தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க, தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்
* தஞ்சாவூரில், 'மாபெரும் சோழர் அருங்காட்சியகம்' அமைக்கப்படும்
* வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
* சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்; கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
* சென்னை, கோவை மற்றும் ஓசூரில், 'தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம்' அமைக்கப்படும்
* சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில், இலவச 'வைபை' சேவைகள் வழங்கப்படும்இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இவற்றில் பெரும்பாலானவை, மேடைகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை தான்; புதிதாக ஒன்றும் இல்லை.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்க, தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழக அரசின் ஆட்சிமொழி சட்டத்துக்கு இணங்க, அரசின் நிர்வாக மொழியாக, தமிழ் மொழி உள்ளது. அரசு நிர்வாகத்தில், தமிழ் மொழியில் சிறப்புற செயலாற்ற, அரசு ஊழியர்களுக்கு மின்காட்சியுரை வழியே வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் பயிலரங்கம் நடத்த, மாவட்டத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
அரசின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக, அலுவலக கோப்புகளில், குறிப்புகள், வரைவுகள் போன்றவற்றை தொடர்ந்து தமிழில் எழுதும் அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கு ஏராளமாக பணம் செலவழித்தும், மாநாடு, பயிலரங்கங்கள் நடத்தியும், நிதி அமைச்சர், பட்ஜெட் வரவு செலவு விபரங்களை, தமிழில் வாசிக்க முடியாமல், ஆங்கிலத்தில் வாசித்தார்.
'தமிழுக்காகவே கட்சியை நடத்துகிறோம்; ஆட்சிக்கு வர விரும்புகிறோம்' என கூறிக் கொள்ளும், தி.மு.க., அரசில் நிதி அமைச்சராக உள்ள தியாகராஜன், தமிழை வாசிக்கவே தடுமாறுவது, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.'திராவிட மாடல் ' வாரிசுகளுக்கு தமிழில், எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க ஒரு 1 கோடி ரூபாயாவது ஒதுக்கியிருக்கலாம்.
துாங்கி வழிந்த அமைச்சர்கள்
தியாகராஜனின் பட்ஜெட் உரை வாசிப்பு, தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பானது. அப்போது, சட்டசபையில் ஒருசிலர் துாங்கி வழிவதை நேரலையில் பார்த்தவர்கள், சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். அந்த படத்தை, தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், 'பள்ளி வகுப்பறையில் இப்படித்தான் துாங்குவாங்க' என, 'கமென்ட்' அடித்துள்ளார்.
இல்லாத மாநிலமே இலக்கு'''வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.சட்டசபையில், அவர் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு திறமையான நிதி மேலாண்மை செய்து, மாநிலத்தில் நிதி நிலையை சீராக்கி, கடனை செலுத்தும் திறனை மேம்படுத்தி உள்ளது. எனவே, தற்போது மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சியை பெருக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நம் மாநிலத்தின் நிதி நிலையில், 2014ல் இருந்து தொடர்ந்து ஏற்பட்ட சரிவை தடுத்து, இரண்டு ஆண்டுகளில், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். வேகமாக அதிகரிக்கும் வட்டி செலவினங்கள், நிதி நிர்வாகத்தில் மத்திய அரசால் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், இந்த சாதனையை செய்துள்ளோம். இது, முதல்வர் தலைமையிலான நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்துக்கு சான்று.இவ்வாறு அவர் கூறினார்.***