பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பையை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மாநிலம் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளதால், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது.
இந்நிலையில், பாலத்தின் கீழ் எரிக்கப்படும் குப்பையால் புகை மூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தின் கீழ், குப்பை, கழிவு மற்றும் பயன்படுத்தாத பொருட்களை போட்டு எரிக்கின்றனர். இதனால், காற்றில் புகை அதிகளவு பரவுகிறது. மேம்பாலத்தில் செல்வோர் கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
மேலும், புகை மண்டலமாக மாறுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கண்காணிப்பு செய்து, குப்பை எரிப்பதை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.