லண்டன்,-பிரிட்டனில், இந்திய துாதரகத்திற்குள் நுழைந்து, மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்திய சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தின் அருகே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
காலிஸ்தான் ஆதரவு கொடியுடன், பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, துாதரகத்தில் பறந்து கொண்டிருந்த மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, பிரிட்டன் அரசை கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய துாதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசியக் கொடியை அப்புறப்படுத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது போன்ற நாசவேலைகளை செய்ய இங்கு அனுமதி இல்லை. இனி இந்திய துாதரகத்தின் பாதுகாப்பை பிரிட்டன் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் பறந்த மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதை அடுத்து, மிகப்பெரிய வடிவிலான மூவர்ணக் கொடி, துாதரக முகப்பில் பறக்க விடப்பட்டது. இந்த புகைப்படத்தை, பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதற்கிடையே, காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பாக்., உளவு அமைப்புள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், துாதரகத்தில் காலிஸ்தான் இயக்கத்தின் கொடியையும் ஏற்றினர். இதை உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல், ஆஸ்திரேலிய பார்லி., அருகே, அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.