வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெலகாவி--கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, அக்கட்சியின் எம்.பி., ராகுல் நேற்று பிரசாரத்தை துவக்கினார்.

''கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்,'' என, அவர் வாக்குறுதி அளித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி 16ம் தேதி பெங்களூரில், 'நான் நாயகி' என்ற தலைப்பில் பெண்களுக்கான மாநாடு நடத்தப்பட்டது.
இதில், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா பங்கேற்றார்.
அப்போது அவர், 'கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத் தலைவிக்கும் மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படும்' என வாக்குறுதி அளித்ததார்.
இந்நிலையில் நேற்று பெலகாவியில், 'இளைஞர் புரட்சி' என்ற பெயரில் காங்., மாநாடு நடந்தது. இதில், அக்கட்சியின் எம்.பி., ராகுல் பங்கேற்றார்.

இதில் பேசிய ராகுல், ''கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'யுவநிதி' என்ற பெயரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும்,'' என்றார்.
இது குறித்து பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''படித்த இளைஞர்களை சோம்பேறி ஆக்கும் வகையில் காங்கிரசின் வாக்குறுதி அமைந்துள்ளது,'' என்றார்.