வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--''வரி வருவாய் அதிகரித்தும், கடந்த மூன்றாண்டுகளில் 2.40 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் தி.மு.க., அரசின் சாதனை,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
![]()
|
அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க. ஆட்சியில், 2020 மார்ச் முதல் 15 மாதங்களுக்கு, தொழிற்சாலைகள், கடைகள் இயங்கவில்லை. இதனால், தமிழக அரசின் வரி வருவாய் குறைந்தது.
அதே நேரத்தில், கொரோனா கால நலத் திட்டங்கள், மருத்துவத்திற்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும், மக்கள் நலத் திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தது. கடந்த இரண்டாண்டுகளில் பத்திரப் பதிவு, கலால் வரி, சாலை வரி உள்ளிட்ட பல்வேறு வரி வருவாய் அதிகரித்துள்ளது.
அதன்படி, வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். ஆனால், குறைந்துள்ளதாக கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஆலோசனைக் குழு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை பட்டியில் அடைத்து வைத்தது; பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது; அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடுவது; சட்டம் - - ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
கடந்த 23 மாத தி.மு.க., ஆட்சியில், ஏற்கனவே 1.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். நடப்பாண்டில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.
இரண்டாண்டுகளில் 2.40 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் தி.மு.க., அரசின் சாதனை.
வரி வருவாய் அதிகரித்தும், திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. ஆதிதிராவிட மக்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க, பன்னாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
'நோபல்' பரிசு
அக்குழு தெரிவித்த பரிந்துரைகள் என்ன; அதில் செயலுக்கு வந்தது என்ன; அதனால் கிடைத்த கூடுதல் வருவாய் என்ன என்பது போன்ற தகவல்கள் பட்ஜெட்டில் இல்லை. மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளது.
![]()
|
சட்டப் போராட்டம் நடத்துவது தான், 'நீட்' தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என, அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் சட்டப் போராட்டம் நடத்தவில்லையா? நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு 'நோபல்' பரிசு கொடுக்க வேண்டும்.
'அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இப்போது தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். எந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பர் என்பது அறிவிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.