வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
கி.சுப்பு, துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஒரு மனிதனின் ஆயுட்காலம், 120 ஆண்டுகள்.ஆனாலும், பெரும்பாலானவர்கள், 80 முதல், 90 வயதில் மரணமடைந்து விடுகின்றனர். அரிதிலும் அரிதாக சிலர் மட்டுமே, 100 வயதை கடந்தும் உயிர் வாழ்கின்றனர்.
![]()
|
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடரில், பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைது செய்யப்பட்ட, பிரபல ரவுடி வில்மர்செகோவியா என்பவனுக்கு, 1,310 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; இவன், 33 கொலைகள் செய்தவன். அதே போல, 22 கொலைகள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய, ஏஞ்சல் போர்டில்லோ என்பவனுக்கு, 945 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் ஆயுட் காலமே, 120 ஆண்டுகள் தான் என்பது, எல் சால்வடர் நாட்டு நீதிபதிகளுக்கு தெரியாதா... பிறகு ஏன், 945, 1,310 ஆண்டுகள் என்றெல்லாம் தண்டனை விதிக்கின்றனர் என்று கேட்கலாம். அந்தக் குற்றவாளிகளின் உயிர், சிறையிலேயே பிரிய வேண்டும்; எக்காரணத்திற்காகவும், அந்தக் கொடூர குற்றவாளிகள் வெளியே வந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் வழங்கப்பட்ட தண்டனைகள் அவை.
அதேநேரத்தில், எல் சால்வடர் நிலவரத்துடன், நம் தமிழக நிலவரத்தையும், ஒப்பிட்டு காட்டாமல் இருக்க இயலவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், 'நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். விரைவில், அதற்கான கோப்பு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்' என்று கூறியிருக்கிறார்.
இன்னமும், அ.தி.மு.க., பாலன், தி.மு.க., - தா.கிருஷ்ணன், நேருவின் தம்பி ராமஜெயம் கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றவாளிகளையே கண்டுபிடிக்க முடியாத நிலையில், சிறையில் உள்ள குற்றவாளிகளை வெளியே விட ஆவன செய்வதாக உறுதி அளிக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
![]()
|
சமீபத்தில் கூட, எம்.பி., திருச்சி சிவா வீட்டில், அமைச்சர் நேருவின் உடன் பிறப்புகள் வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். சொந்தக் கட்சியினர்மீதே, கழகத்தினர் இப்படி தாக்குதல் நடத்துகின்றனர் என்றால், மாற்றுக் கட்சியினர்,சாதாரண பொதுமக்கள் என்றால், அவர்கள் மீதான தி.மு.க.,வினரின் தாக்குதல் எப்படி இருக்கும் என்று, சொல்லவும் வேண்டுமா... அராஜகம் செய்வது, தி.மு.க.,வினருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
பேசாமல், திராவிட மாடல் ஆட்சியில், போலீஸ் நிலையங்களையும், நீதிமன்றங்களையும், சிறைச்சாலைகளையும் இழுத்து மூடி விடலாம். இந்த ஆட்சியாளர்கள் தான் சொல்கின்றனர்... தமிழகம் அமைதிப் பூங்காவாம்!