வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக காங்., தலைவர் அழகிரி:
எங்கள் கட்சி எம்.பி., ராகுல் என்ன குற்றம் செய்தார். அவரது இல்லத்தை சுற்றி போலீஸ் நிற்கிறது. அவர்களால் நிற்க மட்டுமே முடியும்; ராகுலை வேறு எதுவும் செய்து விட முடியாது.
![]()
|
டவுட் தனபாலு:
உங்களின் தலைவர் பதவி நாற்காலி ஊசலாட்டத்துல இருக்கு... உங்க எதிர்கோஷ்டியினர் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் செவி சாய்ச்சிருப்பதாகவும் தகவல்கள் வருது... அதனால, 'ராகுலை, உங்களால எதுவும்செய்ய முடியாது'ன்னு போலீசாரை உசுப்பி விட்டு, 'எதுவும் செய்ய வைக்க' திட்டம் போடுறீங்களோன்னு, 'டவுட்' வருதே!
lll
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
: எந்தவொரு கொள்கையும் நிலையானதல்ல; மாற்றத்திற்கு உட்பட்டது. எனவே, வேளாண் கொள்கை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களை ஆராய்ந்து, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, புதியவற்றை சேர்த்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு:
திராவிட நாடு கோரிக்கையை, 'ஓவர்நைட்'ல அண்ணாதுரை துாக்கி கடாசியதால தான், இன்னைக்கு வரைக்கும், அரசியல் களத்துல, தி.மு.க.,வால நிலைச்சு நிற்க முடியுது என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே மாதிரி, வேளாண் கொள்கையிலயும், விரைவா ஒரு முடிவை எடுங்க!
lll
காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
: காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. பா.ஜ.,வை எதிர்ப்பதில், காங்கிரஸ் தான் முக்கிய பங்காற்றும். காங்கிரசை ஒதுக்கி விட்டு, பா.ஜ.,வை வீழ்த்த மற்ற கட்சிகளால் முடியாது.
![]()
|
டவுட் தனபாலு:
வாஸ்தவம் தான்... ஆனா, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கு நீங்க தானே முதல் அடியை எடுத்து வைக்கணும்... அதை விட்டுட்டு, மாநில கட்சிகள் எல்லாம் எங்க வீடு தேடி வந்து, 'முறைவாசல்' செய்யணும்னு உங்க தலைமை எதிர்பார்த்தா, பா.ஜ.,வின் கனவான, 'காங்கிரஸ் ப்ரீ இந்தியா' சீக்கிரமே நனவாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll