வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு, மேலிடத்தின் ஆதரவு உள்ளதா என்ற குழப்பத்தில், அக்கட்சியின் தமிழக தலைவர்கள் இருப்பதாக தெரிகிறது.

தலைவர் பதவியில் ஒன்றரை ஆண்டுகளை கடந்துள்ள அண்ணாமலைக்கும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வுக்கும் ஏற்பட்டுள்ள மோதல், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10-ம் தேதி கிருஷ்ணகிரி வந்த கட்சியின் தேசிய தலைவர் நட்டா, '2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து பா.ஜ., - எம்.பி.,க்கள் டில்லி வர வேண்டும். 'கடந்த, 2019-ல் இருந்து அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்' என, அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, 17ம் தேதி நிர்வாகிகள் கூட்டத்தில், 'சமரசங்களை செய்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். மே 10-ம் தேதிக்கு பின், என் முடிவை அறிவிப்பேன்' என்றார். இதை கேட்டு, மூத்த தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். 'கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும்' என, வானதி, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் தெரிவிக்க, பா.ஜ.,வில் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், அண்ணாமலை இப்படி அதிரடியாக பேசி வருவதற்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரின் ஆதரவு உள்ளதா; அவர்களை மீறி அண்ணாமலையால் செயல்பட முடியுமா என்ற குழப்பம், தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மாநில தலைவருக்கென ஓர் எல்லை உள்ளது. மேலிடத்தின் ஒப்புதலின்றி அதை தாண்ட முடியாது. அதே நேரத்தில், மாநில தலைவரிடம் விவாதிக்கும் விஷயங்களை, மற்றவர்களிடம் விவாதிக்க மாட்டார்கள். இதனால், அண்ணாமலை பேசியது குறித்து, மேலிடத்தில் விளக்கம் கோர முடியாத நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.
அமித் ஷாவுடன் சந்திப்பு!அ.தி.மு.க., கூட்டணி விவகாரம் தொடர்பாக, அதிருப்தி அடைந்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அனுப்பிய ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., மேலிடம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ., வளர வேண்டும் என்றால், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் அண்ணாமலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர்களிடம் போதிய ஆதரவு இல்லை.இதனால் அதிருப்தி அடைந்த அவர், தன் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, கட்சி மேலிடத்திற்கு அனுப்பியதாக தெரிகிறது. அக்கடிதத்தை ஏற்க, மேலிடம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வரும் 26ல், டில்லி செல்லும் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, இந்த விவகாரங்கள் குறித்து பேச உள்ளார்.அதன் பின்னரே, கூட்டணி விஷயத்தில் அண்ணாமலை கருத்து எடுபடுமா என்பது தெரியவரும் என்கிறது, அக்கட்சி வட்டாரம்.