வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் ஜோடி, கட்டாயப் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் அளிக்க கோரிய மனுவை, மிகவும் முட்டாள்தனமானது என கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அப்தாப் பூனாவாலா என்ற இளைஞரால் கடந்த ஆண்டு மே மாதம், புதுடில்லியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்' எனப்படும், திருமணம் இன்றி சேர்ந்து வாழும் கலாசாரம் தொடர்பாக, வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதில், 'திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடி, கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வழிகாட்டுதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சேர்ந்து வாழும் ஜோடியினருக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, கோரி இருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபடி டி.ஒய்.சந்திரசூட் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இது என்ன முட்டாள்தனமான மனு? எதற்கு வேண்டுமானாலும் நீதிமன்றத்தை நாடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டதா? இது போன்ற மனு மீது இனி அபராதம் விதிக்க வேண்டும். திருமணமின்றி சேர்ந்து வாழும் ஜோடி எங்கு சென்று பதிவு செய்து கொள்வர். மத்திய அரசிடமா?
இதில் மத்திய அரசு செய்ய என்ன இருக்கிறது. சேர்ந்து வாழும் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க விரும்புகிறீர்களா அல்லது இதுபோன்ற உறவே கூடாது என்கிறீர்களா? இந்த முட்டாள் தனமான மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.