வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மத்திய அரசின் புதிய உத்தரவால், அரசு போக்குவரத்து கழகங்களில், 15 ஆண்டுகளை கடந்துள்ள, 1,539 பஸ்கள், 600 கிரேன் லாரிகள், ஜீப்களை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2021 ஏப்ரலில், புதிய வாகன அழிப்பு கொள்கையை, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள்; 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக பயன்பாட்டு வாகனங்கள் அழிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, மாநில அரசுகளுக்கு சொந்தமான, 15 ஆண்டுகளுக்கு மேலான பஸ்கள், இதர வாகனங்களை, 2023 ஏப்., 1க்கு பின் இயக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள, 15 ஆண்டுகளை கடந்த வாகனங்கள் குறித்த புள்ளி விபரங்கள், தமிழக அரசு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிமனை பயன்பாடுகளுக்கு, 1,000த்துக்கும் மேலான லாரிகள்; அலுவலக பயன்பாட்டுக்கு, 500க்கும் மேற்பட்ட ஜீப்கள் உள்ளிட்ட வாகனங்களும் உள்ளன.
மத்திய அரசின் புதிய உத்தரவால், அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள, 15 ஆண்டுகளை கடந்த, 1,539 பஸ்களையும், 600 கிரேன் லாரிகள் மற்றும் ஜீப்களையும் தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பணிமனை வாரியாக, 15 ஆண்டுகளை கடந்த பஸ்கள், ஜீப்கள், லாரிகள் குறித்த விபரங்களை, தமிழக அரசுக்கு சமீபத்தில் அனுப்பி உள்ளோம்.
எங்கள் கணக்கின்படி, தோராயமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் - 529 பஸ்கள்; விழுப்புரம் - 270; கும்பகோணம் - 250; மதுரை - 150; திருநெல்வேலி - 130; கோவை - 120; சேலம் - 90; என மொத்தம், 1,539 பஸ்கள், 15 ஆண்டுகளை தாண்டியும் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, கிரேன் லாரிகள், ஜீப்கள் பிரிவில், 600க்கும் மேற்பட்டவை, 15 ஆண்டுகளை கடந்துள்ளன.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு காலக்கெடு நீட்டிக்க, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும் என, எதிர்பார்க்கிறோம்.
இருப்பினும், பயணியருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2019 - 2020ம் நிதி ஆண்டுக்கு பின், புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு, புதிய பஸ்களில் மாற்றுத் திறனாளிக்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளால், புதிய பஸ் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 1,000 புது பஸ்கள் வாங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ளன. இந்த பஸ்கள் வர ஆண்டு இறுதி வரை ஆகலாம். அதுவரை, 1,539 பஸ்களையும் சேர்த்து, இயக்க வேண்டிய சூழல் அரசுக்கு உள்ளது.உடனே, பாழடைந்த பஸ்கள் என்று விடுவித்தால், மக்களுக்கான பொது போக்குவரத்து சேவை பாதிப்படையும். புதிய பஸ்கள் வாங்கும் வரை, பழைய பஸ்களை அகற்ற, தமிழக அரசு அவகாசம் கோரும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.