வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''இந்தியாவின் ஜி20 மாநாட்டிற்கு இளைஞர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ஜி20 இளம்துாதுவர் உச்சி மாநாடு, 2023, 'உலக இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான துாண்டுகோல்' எனும் தலைப்பில் நேற்று நடந்தது.

இதில், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
தமிழ் கலாசாரம், நாகரிகம், 1,000 ஆண்டுகள் பழமையானது. காலநிலை மாற்றம், உணவு பஞ்சம், பொருளாதார ரீதியான சிக்கல்கள், போர்கள் உள்ளிட்டவற்றால் உலகம் பிரச்னையில் உள்ளது. ஆண், பெண் பேதம், வேளாண் துறையில் பாதிப்பு, பல்வேறு நாடுகளில் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மாநாட்டில் தீர்வு காண வேண்டும்.
கொரோனா காலத்தில் நம் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த தடுப்பூசியை உலகம் ஏற்றுக்கொண்டது. வெளிநாடுகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் பிறர் கஷ்டப்படுவதை விரும்ப மாட்டார்கள். அது நம் டி.என்.ஏ.,வில் உள்ளது. பல நாடுகள் ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி, பிற நாடுகளை துன்புறுத்துகின்றன. ஆனால், நாம் யாரையும் துன்புறுத்துவது இல்லை.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கோட்பாடு அனைத்து மொழிகளிலும் உள்ளது. பிரதமர் மோடி 'ஒரு குடும்பம்' என்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். வேற்றுமை என்பது இயற்கையின் நியதி. ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது கொள்கை. இதைத்தான் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். மொழி, இனம் என்ற பாகுபாடின்றி இது நடந்துள்ளது.

இளைஞர்கள் தான் எதிர்காலம். எனவே உங்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை இந்தியாவின் 'ஜி20' மாநாட்டிற்கு வழங்க வேண்டும். இளைஞர்கள் நீங்கள் தான் நம் அடுத்த தலைவர்கள் என்பதை உணர்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், கனவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்குள் அமைதியாக இருந்த சக்தி விழித்துக்கொண்டுள்ளது; அதுதான் இதற்கு காரணம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான கூட்டு கல்வி முறை, பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு உள்ளிட்ட தலைப்புகளில் குழு கலந்துரையாடல்கள் நடந்தன. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், கலெக்டர் கிராந்திகுமார், கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.