வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக அரசின் பட்ஜெட்டில், சென்னையின் பல்வேறு திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு, 621 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழக அரசின், 2023 - 24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய அறிவிப்புகள் விபரம்:
* சென்னையில், 44 கி.மீ., நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறு சீரமைப்பு பணிகள், அரசு - தனியார் பங்களிப்புடன், 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
* சென்னை தீவுத்திடலில், 30 ஏக்கர் பரப்பளவில், நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் உள்ளிட்ட நவீன நகர்ப்புற வசதிகள், 50 கோடி ரூபாய் செலவில் சி.எம்.டி.ஏ., வாயிலாக ஏற்படுத்தப்படும்
* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ள, கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலுார், அத்திப்பட்டு ஆகிய இடங்களில், 20 கோடி ரூபாய் செலவில், சமுதாயகூடம், நுாலகம், விளையாட்டு வசதிகள் உருவாக்கப்படும்
* சென்னை பெருநகரில், வரும் நிதி ஆண்டில் வெள்ளத் தடுப்பு பணிகள், நீர் வழித்தடங்களை துார்வாரும் பணிகள், 320 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* சென்னை அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 621 கோடி ரூபாய் செலவில், நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணிகள், வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
பன்னாட்டு பொறியியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று, மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளுக்கு மேல் இந்த பாலம் கட்டப்படும். இது ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும்
* மாமல்லபுரம் - மீஞ்சூர் இடையிலான சென்னை புறவட்ட சாலை திட்ட பணிகளுக்கு, 1,847 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* பேருந்து பணிமனைகளை உயர்தர போக்குவரத்து மையங்களாக தரம் உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக, 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடபழநி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பணிமனைகள் மேம்படுத்தப்படும்
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், 119 கி.மீ., துாரத்திற்கு, மூன்று வழித்தடங்களில் முழு வீச்சில் நடக்கின்றன.
வரும் நிதியாண்டில் இப்பணிகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* சென்னையில், 'தமிழக தொழில்நுட்ப நகரங்கள்' அமைக்கப்படும்
* செங்கல்பட்டில் ஒரு லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்
* பிச்சாவரம் சுற்றுலாத் துறை மேம்படுத்தும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
* வரும் ஆண்டில் திருத்தணி கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி
* சென்னையில் சீரான வளர்ச்சியை உறுதி செய்ய, வட சென்னை வளர்ச்சி திட்டம், 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
* ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு, உலக தரமான திறன் பயிற்சி வழங்க, 120 கோடி ரூபாய் செலவில், சென்னை அம்பத்துாரில், தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து, சென்னையில் ஓர் உலகளாவிய, அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும். பன்னாட்டு வல்லுனர்கள் வாயிலாக, இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
* சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில், இலவச 'வைபை' சேவைகள் வழங்கப்படும்.
துணை நகரங்களுக்கு நிதி எங்கே?
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சென்னை பெருநகரில், இரண்டாவது முழுமை திட்டத்தில் பல்வேறு துணை நகரங்கள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.இதன் அடிப்படையில், நடப்பு நிதி ஆண்டுக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் பகுதிகளில் துணை நகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான புது நகர் வளர்ச்சித் திட்டங்களை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் புது நகர் வளர்ச்சித் திட்டத்துக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன. புதிய துணை நகரங்களுக்கான பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அரசு புதிய திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு எதுவும் வராதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.மேலும், சென்னையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., நிதியே ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து இதற்கான நிதி வராதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.