வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கொரோனாவுக்கு பின், முழுவீச்சில் பள்ளிகள் இயங்கினாலும், பாடத்திட்ட சுமையோடு, அரியர் தேர்வும் எழுத வேண்டுமென்ற நெருக்கடியால் தான், பெரும்பாலான மாணவர்கள் இடைநிற்றல் தழுவியதாக, தலைமையாசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 363 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 35 ஆயிரத்து 827 மாணவர்கள், 770 தனித்தேர்வர்கள், 186 மாற்றுத்திறன் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இதில், மொழிப்பாடத்தேர்வுகளில் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் 'ஆப்சென்ட்' ஆகினர். மாநில அளவில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. மாநில சராசரியை ஒப்பிடுகையில், 3.2 சதவீதம் பேர், கோவை மாணவர்கள்.
இங்கு, அதிக வடமாநில தொழிலாளர்கள் வேலை தேடி வருகின்றனர். பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் இவர்கள், வேறு இடங்களுக்கு செல்லும் போது, குழந்தைகளையும் உடன் அழைத்து செல்வதால், இடைநிற்றல் தவிர்க்க முடியாத பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.
தற்போது பிளஸ் 2 எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை. பிளஸ் 1 தேர்வில், மூன்று பாடங்களுக்கும் மேல் தோல்வியை தழுவிய பலர், பள்ளிக்கே வரவில்லை. மாற்றுச்சான்றிதழ் பெற்று, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்ந்து விட்டனர். சில மாணவர்கள், ஓரிரு வாரங்களே பள்ளிக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கும் சேர்த்தே, ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதால்தான், ஆப்சென்ட் ஆனோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கொரோனா தொற்றுக்குப் பின், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி, கவனச்சிதறல் அதிகரித்துள்ளது. இதை சரியாக கையாளாமல், பள்ளிக்கல்வித்துறை கோட்டை விட்டது தான், ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
டீ.சி., பெற்ற மாணவர்களின் பட்டியலை, எமிஸ் இணையதளத்தில் இருந்து நீக்கவில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்துவதால்தான், அதிக பாடங்களில் தோல்வியை தழுவும் மாணவர்கள், பிளஸ் 2 தொடர தயங்குகின்றனர்.
அரியர் தேர்வு எழுத வாய்ப்பளித்தாலும், பிளஸ் 2 பாடங்களையும் சேர்த்து படிக்க முடியாமல் திணறுகின்றனர். சிலபஸ் கடினமாக இருப்பதால் தான், செய்முறை கொண்ட முக்கிய பாடங்களில், 15 மதிப்பெண்கள் கூட பெற முடியாமல், தோல்வியை தழுவுகின்றனர்.

நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வு எழுதுவோரை மட்டுமே கருத்தில் கொண்டு, மற்ற மாணவர்களுக்கு அதிக பாடச்சுமையை கொடுத்திருப்பதும், இடைநிற்றலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பிரிட்ஜ் கோர்ஸ், கவுன்சிலிங், குறைந்தபட்ச கற்றல் கையேடு, ப்ளூ பிரிண்ட் ஆகியவை வழங்கியிருந்தால், ஆப்சென்ட் எண்ணிக்கை குறைந்திருக்கும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவிக்கின்றனர்.