வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில், கடந்த காலங்களைப்போல் கட்டுமானங்கள் செய்தால் நாம் பேராபத்தை சந்திப்போம்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

கோவை, நீலாம்பூரில் உள்ள கல்வி நிறுவனத்தில் ரியல் எஸ்டேட், கட்டுமானம் தொடர்பான 'நர்விகேட் 2023' என்ற இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.
இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியதாவது:
உலகப் பரப்பில் வெறும், 4 சதவீதம் மட்டுமே நம்மிடம் உள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில், 17 சதவீதம் பேர் நம் தேசத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த, 15 ஆண்டுகளில், 20 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
ஆனால், கூடுதல் மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதல் நிலம் நம்மிடம் இல்லை. இருக்கும், 4 சதவீத நிலப்பரப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் அரண்மனைகள் கட்டியது போன்ற அணுகுமுறையை இப்போது கையாண்டால் நாம் பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும். தேசம் என்பது வெறும் கட்டடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளால் கட்டமைக்கப்படுவதில்லை. சிறந்த மனிதர்களை உருவாக்குவதன் மூலமே சிறந்த தேசம் உருவாகிறது. உடல் ரீதியாக, மன ரீதியாக, திறன் ரீதியாக ஆகச்சிறந்த மனிதர்களை உருவாக்குகிறபோது, மகத்தான தேசம் உருவாகும்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களால் நாட்டில் குற்றவியல் மற்றும் இதர எதிர்மறை செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தேசத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நாட்டில் அதிகப்படியான திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.