வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி மாநில பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

டில்லி மாநில பட்ஜெட் மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு பதில் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி, டில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ம் தேதி துவங்கியது. பட்ஜெட் இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்பட இருந்தது.

ஆனால் சில காரணங்களுக்காக, மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும் படி அறிவித்தது. இதனால் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரி., எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 75 ஆண்டுகளில் பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். டில்லி மக்கள் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? தயவு செய்து, டில்லி பட்ஜெட்டை தடை செய்யாதீர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன், தங்கள் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.