வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத மத்திய பா.ஜ., அரசு, தேசபக்தி பற்றி பேசி வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் லண்டனில் தேசத்தை இழிவுபடுத்தியதாக பா.ஜ., தொடர்ந்து குற்றம் சாட்டுவதுடன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பார்லி.,யின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், பிரதமர் மோடியும் முன்பு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது நாட்டு மக்கள் குறித்து பேசியதாக காங்கிரசும் பதிலுக்கு பேசி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‛ராகுல் நிச்சயமாக மன்னிப்பு கேட்க மாட்டார். நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத வரையில் மீண்டும் மீண்டும் அதே கோரிக்கையை எழுப்புவோம்.
இது பிரச்னையில் இருந்து திசைத்திருப்பும் செயல். நமது தூதரகம் தாக்கப்பட்டுள்ளது குறித்து அவர்கள் (பா.ஜ., அரசு) எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. வங்கி மோசடியில் ஈடுபட்ட மெஹூல் சோக்ஷிக்கு பாதுகாப்பு கொடுத்த இவர்கள் தேசபக்தி பற்றி பேசி வருகின்றனர்' எனக் கூறினார்.