வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வேளாண் பட்ஜெட் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளை அரசு ஏமாற்றி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. சட்டசபையில் மானிய கோரிக்கையில் இடம்பெற்றது தான், வேளாண் பட்ஜெட்டிலும் இடம்பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு என பெரிய திட்டங்களும் இல்லை. அவர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. 2 மணி நேரத்திற்கு மேல் வேளாண் பட்ஜெட் உரையை வாசித்தாலும், முக்கியமாக எது கிடைக்க வேண்டுமோ அது இல்லை.
கரும்புக்கு ஆதார விலை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், பட்ஜெட்டில் ரூ.195 தான் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. விவசாயிகளை ஏமாற்றுவது போல் உள்ளது.

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கொள்முதல் நிலையங்களில் தார்ப்பாய்கள் இல்லாததால் நெல்மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை. உரிய இழப்பீடு வழங்கவில்லை. விவசாயிகளின் பாதிப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் இல்லாததும் வேதனை அளிக்கிறது.
நீர்நிலைகளை பாதுகாப்பதில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் மெதுவாக நடப்பதால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் பட்ஜெட் என்ற மாயை ஏற்படுத்தி, விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். குடிமராமத்து திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. மின் தட்டுப்பாடு இல்லை என்றால், மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு நேரக்கட்டுப்பாடு ஏன்? திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. அதனை செயல்படுத்த வேண்டும்.
தி.மு.க.,வில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது, செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? இவ்வாறு பழனிசாமி கூறினார்.