வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மத்திய அரசு மேற்குவங்க மாநிலத்திற்கு மட்டும் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதனை கண்டித்து மார்ச் 29 முதல் 30ம் தேதி வரை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா செல்கிறார். இப்பயணத்தின்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது: மத்திய அரசு, மேற்குவங்கத்திற்கு எந்தவொரு நிதியையும் அளிப்பதில்லை. நாட்டிலேயே மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதுவும் பெறாத ஒரே மாநிலம் மேற்குவங்கம் தான்.

நிலுவையில் உள்ள தொகையையும் கொடுக்கவில்லை; இந்தாண்டு வெளியான மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் இந்த பாகுபாடை கண்டித்து கோல்கட்டாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக வரும் மார்ச் 29ல் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இப்போராட்டம் மார்ச் 30ம் தேதி மாலை வரை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.