இன்று ஷாப்பிங் மால் சென்றால் அங்கு அதிக விலையில் விற்கப்படும் உணவுப் பண்டங்களில் முக்கியமானது ஹாட் டாக். பிட்சா, பர்கர், பட்டர் சாண்விட்ச், பாப்கார்ன், கோலா பானங்கள், பிரஞ்ச் ஃப்ரைஸ் உள்ளிட்ட பல உணவுகள் ஷாப்பிங் மால் திரையரங்குகளிலும் பொழுதுபோக்கு அங்காடிகளிலும் பிரபலமாக இருந்தாலும் ஹாட் டாக்குக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வரவேற்பு அதிகம். மேலை நாட்டு உணவுப் பண்டமாக இருந்தாலும் சாப்பிடும் உணவுப்பொருளுக்கு ஹாட் டாக் (சூடான நாய்..!) என்றா பெயர் வைப்பார்கள்? வேடிக்கையான இந்த உணவுக்கு 'ஹாட் டாக்' என்கிற பெயர் எவ்வாறு வந்தது எனத் தெரிந்துகொள்வோமா?
அமெரிக்காவின் பிரபல நியூ யார்க் டைம்ஸ் இதழில் பணியாற்றி வந்தவர் கேலிச் சித்திரக் கலைஞர் டாட் டார்கன். நியூ யார்க் போலா மைதானத்தில் இவர் அமர்ந்து கேலிச் சித்திரம் வரைவது வழக்கம். அங்கு நடைபாதை வியாபாரிகள் தின்பண்டங்களை விற்பது வழக்கம். அவர்கள் டேஷெண்ட் சாசேஜ், ரெட் ஹாட்ஸ் என்கிற பெயரில் ஒரு உணவுப் பொருளை விற்று வந்தனர்.
![]()
|
![]()
|
நம்மூரில் பப்ஸ், சமோசாவை நாம் வாங்கி சாப்பிடுவது போல அமெரிக்க தெருக்களில் டேஷண்ட் சாசேஜுக்கு வரவேற்பு அதிகம். டேஷண்ட் சாசேஜை டேஷண்ட் நாய்மீது சாஸ் ஊற்றியதைப் போல ஓர் கேலிச்சித்திரம் வரையலாம் என மைதானத்தில் அமர்ந்திருந்த டாட் டார்கன் எண்ணினார். வரைந்தும் முடித்துவிட்டார். ஆனால் டாட் டார்கனுக்கு டேஷெண்ட் என்கிற ஜெர்மானிய வார்த்தையை உச்சரிக்க வரவில்லை. எனவே அந்த சித்திரத்துக்கு ஹாட் டாக் எனத் தலைப்பிட்டார். இந்த கேலிச்சித்திரம் நியூ யார்க் டைம்ஸ் இதழில் பிரசுரமாகி விற்பனையில் சக்கைபோடு போட்டது. இதனையடுத்து டேஷண்ட் சாசேஜ் என்கிற உணவுப் பொருள் ஹாட் டாக் என்று அழைக்கப்பட்டது.