வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மரண தண்டனை கைதிகளை தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றுவதை விட, வலி குறைந்த முறையில் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
மரண தண்டனை பெற்ற கைதிகளுக்கான தண்டனையை, வலி குறைந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், துப்பாக்கியால் சுட்டும், விஷ ஊசி போட்டு அல்லது மின்சார இருக்கையை பயன்படுத்தி தண்டனையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சந்திரசூட் கூறுகையில், விஷ ஊசி செலுத்துவது வலி நிறைந்தது. துப்பாக்கியால் சுடுவது என்பது, ராணுவ ஆட்சியாளர்களுக்கு விருப்பமான பொழுது போக்காக இருந்தது. இது முற்றிலும் மனித உரிமை மீறல் ஆகும்.
விஷ ஊசி செலுத்தும்போது, எந்த மாதிரியான ரசாயனம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. வேறு வழிகள் இருந்தால், தூக்கு தண்டனை நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்யலாம்.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தவிர வலி குறைந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றும் முறை குறித்த ஆலோசனையை மத்திய அரசு துவக்க வேண்டும். தூக்கில் போடுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு கூற வேண்டும். இந்த விவகாரம் குறித்து குழு அமைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு நீதிபதி கூறினார்.