வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளரும், மத தீவிரவாத பிரசாரகருமான அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய போலீசார் தீவிர வேட்டை நடத்தி வரும் நிலையில் பல்வேறு 'கெட்டப்'களில் அம்ரித்பால் சிங் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு, காலிஸ்தான் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.கடந்த 1984ல் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், இந்த அமைப்பு ஒடுக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் சமீப காலமாக காலிஸ்தான் ஆதரவு போராட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
![]()
|
'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அம்ரித்பால் சிங் காலிஸ்தான் பயங்கரவாத பிரசாரங்களை நடத்தி இளைஞர்களை துாண்டிவிட்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி தனது வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பைச் சேர்ந்த இளைஞரைபோலீசார் கைது செய்தனர். அவனை மீட்க தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா போலீஸ் ஷ்டேஷனை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டார். இதில், எஸ்.பி., உட்பட ஆறு போலீசார் காயமடைந்தனர்.
கடந்த 18ம் தேதி அம்ரித்பால் சிங்கை கைது செய்ய, பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுதும் வாகன சோதனை நடத்தினர், அப்போது அனைத்து சாலைகளும் சீலிடப்பட்டுள்ளன. அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்ற நிலையில் அவர் தப்பியோடினார்.
பல வேடங்களில் அம்ரித்பால்
இது குறித்து பஞ்சாப் எஸ்.எஸ். கில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அம்ரித்பால் சிங் நாட்டை விட்டு தப்பியோட வாய்ப்பில்லை. அவனின் பல்வேறு முக பாவங்களுடன் கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பல வேஷங்களில் பதுங்கியிருப்பது தெரிகிறது. கடந்த 18 ம்தேதி எங்களிடம் சிக்கியிருக்க வேண்டும். எப்படியே தப்பிவிட்டான். தற்போது அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் 12 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்.ஐ.ஏ. போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அம்ரித்பால் கடைசியாக தப்பி சென்றபோது விட்டு சென்ற காரை பறிமுதல் செய்து உள்ளோம். அவருக்கு 4 பேர் உதவி செய்து உள்ளனர். அந்த 4 பேர் மீது ஆயுத சட்டம் பதிவாகி உள்ளது. இதில் , ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நங்கல் ஆம்பியன் கிராமத்தில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற அம்ரித்பால், உடைகளை மாற்றி கொண்டு, இரு சக்கர வாகனத்தில் மீண்டும் தப்பியுள்ளார். அவருக்கு உதவியவர்களை கைது செய்த பின்னர் அவர்கள் இந்த விவரங்களை தெரிவித்தனர் . இவ்வாறு அவர் கூறினார்.