தேனி:தேனியில் கனரா வங்கி மேலாளர்களுக்கு 60 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்து, அதை வட்டியுடன் செலுத்த தேனி மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கண்டமனுார் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து கழக டிரைவர் கண்ணன் 63. இவர், தேனி கனரா வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 7,600 வைத்திருந்தார். பணத்தை 2016 டிச., 4ல் எடுக்கச் சென்றார். வங்கிக் கணக்கில் 10 ரூபாய் மட்டுமே இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 2016 நவ., 8ல் நாடு முழுதும் பணமதிப்பிழப்பு அமலானதால் வங்கியில் முறையான பதில் இல்லை. பின், மாவட்ட சைபர் கிரைம் போலீசில்புகார் அளிக்க வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட கண்ணன், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய நீதிபதி சுந்தரம், உறுப்பினர் ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
கண்ணன் தன் வங்கிக் கணக்கில் வைத்திருந்த ஒரு லட்சத்து 7,600 ரூபாய்க்கு 12 சதவீத வட்டியுடன் கூடிய தொகை, மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக அபராதம் 50 ஆயிரம் ரூபாய் 9 சதவீத வட்டியுடன் கூடிய தொகை, வழக்கு செலவுக்காக 10 ஆயிரம் என, மொத்தம் 1,67,600 ரூபாயை பாதிக்கப்பட்ட கணணன் வங்கிக் கணக்கில் ஒரு மாதத்துக்குள் செலுத்த உத்தரவிட்டனர்.
அபராதம் மற்றும் வழக்குச் செலவை கனரா வங்கியின் தேனி மண்டல மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
இவ்வறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.