திருநெல்வேலி:கடல் அரிப்பால் பாதிப்படைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழையில், துாண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் நேற்று 10வது நாளாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக, துாத்துக்குடி மாவட்ட மீனவர்களும் நேற்று முன் தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, பஞ்சல், பெருமணல், கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கிராமங்களில் கடல் அலை சீற்றத்தால் கடற்கரையோரம் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மண் அரிப்பைத் தடுக்க கடற்கரையில் துாண்டில் வளைவு அமைக்கக் கோரி, மார்ச் 11 முதல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம், 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக, துாத்துக்குடி மாவட்டத்திலும் புன்னக்காயல் துவங்கி திருச்செந்துார் அமலிநகர், மணப்பாடு, பெரியதாழை வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.