புதுடில்லி:பிரதமர் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கெரா மீது தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளை, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கெரா, பிப்., 17ல் மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன், லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அசாம் மாநிலம் ஆகிய மூன்று இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, பவன் கெராவை அசாம் போலீசார் பிப்., 23ல் கைது செய்தனர். அவருக்கு மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் அன்றைய தினமே இடைக்கால ஜாமின் அளித்தது.
இந்நிலையில், மூன்று வழக்குகளையும் ஒரே போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றக்கோரி, பவன்கெரா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அப்போது, இடைக்கால ஜாமினை ஏப்., 10 வரை நீட்டித்த உச்ச நீதிமன்றம், பவன்கெரா மீது தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளையும் உ.பி.,யின் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி உத்தரவிட்டது.