புதுடில்லி:புதுடில்லி சட்டசபையில் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டது.
நேற்று பிற்பகலில் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 17ம் தேதி துவங்கியது.
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல்செய்யப்படும் என எதிர்பார்க்க-ப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
ஆனால், டில்லி அரசு அனுப்பிய பட்ஜெட் கோப்புகளை ஆய்வு செய்தஉள்துறை அமைச்சக அதிகாரிகள், விளம்பரத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்துள்ளதாகவும், வேறு சில விளக்கங்களும் கேட்டு, ஒப்புதலை நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில், சட்டசபையில் நேற்று, நிதி அமைச்சர் கைலஷ் கெலாட் பேசியதாவது:
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கோப்புகள்
பட்ஜெட் கோப்புகள், துணை நிலை கவர்னருக்குஅனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை அங்கீகரித்து உடனடியாக அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பட்ஜெட்டை கூட தாக்கல் செய்ய முடியவில்லை. மக்களின் அரசை செயல்படவிடாமல் தடுத்து மக்களை துன்புறுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், மத்திய அரசின் மாநில விரோதப்போக்கைக் கண்டித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கோஷமிட்டனர்.
அதைக் கண்டித்த சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், சபையை மதியம் 12:00 மணி வரை ஒத்திவைத்தார்.
டில்லி அரசுக்கும் மத்தியஅரசுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில், டில்லி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமா என சந்தேகம் எழுந்தது.
ஆனால், நேற்று பிற்பகலில் டில்லி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, டில்லி சட்டசபையில் நிதி அமைச்சர் கைலாஷ் கெலாட், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
பா.ஜ.,வின் டில்லி மாநில செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, “டில்லி அரசு தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே, மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டுகிறது. உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு மூன்று நாட்களாக பதில் அளிக்காமல் இப்போது மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்,” என்றார்.
சட்டசபை மீண்டும் கூடியபோது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல்கள் இல்லாமல் இருந்திருந்தால் டில்லி இன்னும் 10 மடங்கு முன்னேறியிருக்கும். நாங்கள் மக்களுக்கு வேலை செய்ய விரும்புகிறோம். யாருடனும் சண்டையிட விரும்பவில்லை. சண்டை போடுவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே டில்லி அரசு விரும்புகிறது.
டில்லி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், முதலில் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். இதுவே பிரதமருக்கு நான் சொல்லும் சூட்சுமம்.பிரதமர் அண்ணன் என்றால் நான் தம்பி. மக்கள் சேவையில் அண்ணன் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தம்பியை வெல்ல வேண்டும் என நினைத்தால் அவனை நேசியுங்கள். பட்ஜெட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் மத்திய உள்துறையின் கேள்விகளுக்கு விளக்கம்அளித்தோம். இப்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். நான் தலைவணங்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதுதான் அவர்களின் நோக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அனுப்பிய கடிதத்தில், ''கடந்த 75 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட் முடங்குவது இதுவே முதல் முறை. டில்லி வாசிகள் மீது உங்களுக்கு என்ன கோபம்? தயவு செய்து டில்லி அரசின் பட்ஜெட்டை முடக்காதீர்கள். டில்லி மக்கள் சார்பில் கரங்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்,'' என, கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், டில்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:டில்லி அரசின் பட்ஜெட்டை நிறுத்தி வைத்தது முற்றிலும் வெட்கக் கேடான செயல். இதனால் உலகமே நம்மை கேலி செய்கிறது. இது, தேச விரோத செயலையும் விட மோசமானது. இந்தச் சதியின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கபில் சிபல் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளபதிவில், ''டிராபிக் சிக்னலில் சிவப்பு விளக்கைப் பார்த்தவுடன்நிறுத்தப்படும் கார் போல, மாநில அரசின் பட்ஜெட்டை நிறுத்தி வைக்க முடியாது,'' என, கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: டில்லியில் தனிநபர் வருமானம் 14.18 சதவீதம் உயர்ந்துள்ளது குறித்து பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. தினமும் தடைகள் உருவாக்கப்பட்டாலும், டில்லி அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தாமல் மக்கள் நலனுக்காக மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.
டில்லி சட்டசபையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கைப்படி, தலைநகர் டில்லியில் தனிநபர் வருமானம் 14.18 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021 - 20-22ல் தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்சத்து 89,529 ஆக இருந்தது. அதுவே, 2022- - 2023ல் 4 லட்சத்து 44,768 ஆக உயர்ந்துள்ளது.தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் டில்லியில் தனிநபர் வருமானம் 2.6 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, 2020 - 20-21ல் 3 லட்சத்து 31,112 ஆக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து இருந்த 2020 - 20-21ல் 19.53 சதவீத எதிர்மறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், டில்லி அரசின் வரி வசூல் 2021- - 2022ல் 36 சதவீத வளர்ச்சி அடைந்து இருந்தது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கவர்னர்
அலுவலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசு தன் ஊழல்களை மறைத்து
திசை திருப்புவதற்காக, தவறான அறிக்கைகளை வெளியிட்டு டில்லி மக்களையும்,
ஊடகங்களையும் நம்பவைக்க முயற்சிக்கிறது. டில்லி ஒரு யூனியன் பிரதேசம்தான்.
மாநில அரசு அல்ல. டில்லி யூனியன் பிரதேச அரசு மத்திய அரசின் ஒரு
பகுதியாகத்தான் செயல்பட முடியும்.
யூனியன் பிரதேச அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அரசியலமைப்பு சாசணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதி ஒப்புதலைப் பெறுவதற்கு முன், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை நிர்ணயித்தது டில்லி அரசின் தவறு.இவ்வாறு அவர்கள் கூறினர்.