புதுடில்லி:தொழிலதிபர் வீட்டில் பணம், நகைகளை திருடிய வேலைக்காரப் பெண் மற்றும் டிரைவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு தில்லி விவேக் விஹரில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டுக்கு கடந்த 18ம் தேதி மதியம் வந்த காஸ் மீட்டர் கணக்கெடுப்பாளர் தொழிலதிபரின் மகள் மற்றும் வீட்டு வேலைக்காரியை கட்டிப் போட்டு தங்கம், வைர நகைகள் மற்றும் 9 லட்சத்து 10,400 ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றார்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வீட்டில் பணிபுரிந்த மூவரை கைது செய்து, நகை மற்றும் பணத்தைக் கைப்பற்றினர்.
இது குறித்து, போலீஸ் துணை கமிஷனர் ரோஹித் மீனா கூறியதாவது:
தொழிலதிபர் வீட்டில் மத்தியப் பிரதேசத்தின் ஜான்ஸி நகரைச் சேர்ந்த பூஜா என்ற பெண் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் நகரைச் சேர்ந்த குலாப் சிங் டிரைவராக மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்தார்.
காஜியாபாத்தைச் சேர்ந்த வாசிம், கடந்த 2009ல் குலாப் சிங்குடன் மானசரோவரில் பணிபுரிந்த போது நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
குலாப் சிங் மகள் திருமணத்துக்காக லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. மனைவியின் மருத்துவச் செலவுக்கு பணம் கிடைக்காமல் வாசிம் தவித்து வந்தார். தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இந்த திட்டத்தில், வேலைக்காரப் பெண் பூஜாவும் இணைந்து கொண்டார்.
மூவரும் சேர்ந்து போட்ட திட்டப்படி, கடந்த 18ம் தேதி மதியம் தொழிலதிபர் மகள் மற்றும் பூஜா ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து கொண்டு வந்த வாசிம், காஸ் மீட்டர் ரீடிங் எடுக்க வேண்டும் எனக்கூறி வீட்டுக்குள் நுழைந்தார்.
திடீரென, பூஜா மற்றும் தொழிலதிபர் மகள் இருவரையும் தாக்கி கை,கால் மற்றும் வாயைப் பொத்தி கட்டிப்போட்டார். பின், பீரோவில் இருந்த பணம் மற்றும் தங்க, வைர நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து, முதலில் விசாரணை நடந்த போது பூஜாவிடம் சற்று அழுத்தமாகவே விசாரித்தோம். ஆனால், அந்தப் பெண் தங்கள் நம்பிக்கைக்கு உரியவள், அவளை சந்தேகப்பட வேண்டாம் என தொழிலதிபர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், டிரைவர் குலாப்சிங்கின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டுபிடித்தோம். பூஜா மற்றும் சிங் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று நடத்திய தீவிர விசாரணையில் திட்டமிட்டு கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.
பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டன. மூவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.