திண்டிவனம் தைலாபுரத்தில், பா.ம.க., சார்பில், நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறுகையில், 'இம்மாதம், 8, 9, 10ம் தேதிகளில் லண்டனில் இருந்தேன். மீண்டும், 11ம் தேதி தைலாபுரம் வந்தேன்' என்றார். இதைக் கேட்டு, கட்சியினரும், நிருபர்களும் விழித்தனர்.
உடனே ராமதாஸ், 'நான் பேசியது யாருக்காவதுபுரிந்ததா?' என்று கேட்க, அனைவரும், 'புரியவில்லை' என்றனர்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், 'தமிழைத் தேடி பயணத்தின் போது, சென்னையில் இருந்தேன். அங்கு யாரும் தமிழ் பேசவில்லை. அதனால், அங்கிருந்த நாட்களை, நான் லண்டனில் இருந்ததைபோல உணர்ந்தேன். அதைத்தான் அப்படி கூறினேன்' என்றதும், அனைவரும் சிரித்தனர்.
மூத்த நிருபர் ஒருவர், 'அதெல்லாம் சரி... தமிழகம் முழுக்க தமிழை வளர்க்க, டாக்டர் என்ன திட்டம் வச்சிருக்கார்னு கடைசி வரைக்கும் சொல்லலியே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.