வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குன்னூர் : குன்னூர் அரசு மருத்துவமனையில்உடலில் வெந்நீர்பட்டு, 3 வயது குழந்தைக்கு, உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் மணிமாறன். இவரின் மகனுக்கு, வரும் வாரம் திருமணம் நடக்க உள்ளதால், கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியை சேர்ந்த கார்த்தி, காளியம்மாள் தம்பதியரின், 3 வயது மகள் சரண்யாவை பாட்டி சுசீலா அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சரண்யா, வெந்நீர் தொட்டியில் தவறி விழுநததில், காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை உறவினர்கள் அழைத்து வந்தனர்.மாலை 3.41 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.மாலை 5:00 மணியளவில் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர்.
தலைமை மருத்துவர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம், உறவினர்கள் கூறுகையில், "ஒரு நர்ஸ் மட்டுமே இருந்த நிலையில், டுயூட்டி டாக்டர் உரிய முறையில் பார்க்காததாலும், 108 ஆம்புலென்ஸ் வராததாலும் மேல் சிகிச்சைக்கு அனுப்பவில்லை.தனியார் ஆம்புலென்ஸ. அழைப்பதையும் தடுத்துவிட்டனர். குழந்தை உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.
தொடர்ந்து, நீலகிரி கூடுதல் எஸ்.பி., மோகன் நிவாஸ், தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இருதரப்பினரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய, கூடுதல் எஸ்.பி., மோகன் நிவாஸ் கூறுகையில், "குழந்தை வெந்நீர் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் பார்த்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும், 108 ஆம்புலென்ஸ் வரவில்லை எனவும் புகார் கூறியுள்ளனர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சி.சி.டி.வி., ஆய்வு செய்யப்படும். டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும், " என்றார்.
பிரேத பரிசோதனை செய்து உடனடியாக கேரளாவுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பிறகு, போராட்டம் இரவு 10:00 மணியளவில் கைவிடப்ட்டது.