புதுடில்லி : தேசியவாத காங்., கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள, தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்யவுள்ளது.
தேசிய கட்சிகளுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு, தலைமை தேர்தல் ஆணையம் சில வரையறைகளை நிர்ணயித்துள்ளது.
இதன்படி, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், குறைந்தது, 6 சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும்.மேலும், மொத்த லோக்சபா தொகுதகிளில், 2 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதியை பெற்றிருக்கும் கட்சிகளுக்கு, தேசிய கட்சிக்கான அங்கீகாரம் அளிக்கப்படும்.
![]()
|
இந்த அங்கீகாரம் கிடைத்தால், தேர்தல்களில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும். புதுடில்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும். அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் தேர்தலில் பிரசாரம் செய்யவும் நேரம் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை, தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்யவுள்ளது. தேசிய கட்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகளை கடந்த சில தேர்தல்களில் இந்த கட்சி பூர்த்தி செய்யவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.