சென்னை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில், இம்மாதம், 16ல் தடம் எண்: '5சி' மாநகர பேருந்து தாறுமாறாக சென்றது.
அங்கு, ரோந்து பணியில் ஈடுபட்ட, உதவி கமிஷனர் சார்லஸ் சாமராஜ்துரை, பேருந்தை நிறுத்த முயன்றார். ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதால், ஜீப்பில் சென்று பேருந்தை வழிமறித்தார்.
கருவி வாயிலாக சோதனை செய்தபோது, ஓட்டுனர் போதையில் இருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். பயணியரை மாற்று பேருந்தில் அனுப்பினார்.
அதேபோல, ராயப்பேட்டை, தலையாரி தெருவில் வசிக்கும் மோகன், அதே பகுதி ராதாகிருஷ்ணன் சாலையில் பைக்கில் சென்ற போது, கீழே கிடந்த 1.5 சவரன் நகையை எடுத்து, மயிலாப்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
காசிமேடு பகுதியில், காரில் கஞ்சா கடத்திய, ஆந்திராவைச் சேர்ந்த மூவரை, எஸ்.ஐ., செல்வகுமார், சிறப்பு எஸ்.ஐ., ராஜவேல் உள்ளிட்டோர் கைது செய்தனர்.
இவர்கள் உட்பட, பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்த மற்றும் குதிரை ஏற்ற போட்டியில் வெற்றி பெற்ற போலீசார் சுகன்யா, மணிகண்டன் உள்ளிட்டோரை பாராட்டி, கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று சான்றிதழ் வழங்கினார்.