பள்ளிக்கரணை,: பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராணி, 43.
இவர் போக்குவரத்து விபத்துகள் நடக்கும் போதும், அது குறித்து விசாரணை நடத்த செல்லும் போதும், தனக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை அழைத்து சென்றார்.
அந்த வழக்கறிஞர்கள் வாயிலாக, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடாக கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது.
இதில் முரண்படுவோரை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிலர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நடத்திய விசாரணையில், இன்ஸ்பெக்டர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணியை பணியிடை நீக்கம் செய்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் காமினி தலைமையில், ஏழு மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆய்வாளர் ராணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.