வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடுகளுக்கான விற்பனை பரப்பளவில், பொது பயன்பாட்டுக்கான 'சூப்பர் பில்டப் ஏரியா' வரைமுறையின்றி அதிகரிக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், சதுர அடிக்கு என்ன விலை என்று தான் கவனிக்கின்றனர். அந்தந்த பகுதியின் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஒரு சதுர அடி, 4,500 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த விலையின் உள்ளடக்கம் என்ன என்பதை, விற்பனையாளர்கள் தெளிவுபடுத்துவதில்லை.
இதில் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை செய்யும்போது, வீட்டில் சுவர்களுக்கு இடைப்பட்ட பரப்பளவான 'கார்ப்பெட் ஏரியா' எவ்வளவு என்பதை தெளிவாக குறிப்பிட்டுவது கட்டாயம்.
ஆனால், இந்த இடத்துடன், 'காமன் ஏரியா' என்ற பொது நிலத்துக்கும் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாக வீடு விற்பனையில், 900 சதுர அடி வீடு என்றால், ஒரு சதுர அடியின் விலை அடிப்படையில், 900 சதுர அடிக்கு தொகை கணக்கிடப்பட்டு, விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில், பொது பயன்பாட்டு பகுதிக்கான 'சூப்பர் பில்டப் ஏரியா'வுக்கான பங்கு, 15 சதவீதம் வரை இருக்கும்.
வீட்டின் விற்பனை அளவான, 900 சதுர அடியில், 15 சதவீத பரப்புக்கான தொகை, காமன் ஏரியாவுக்கு என்ற அடிப்படையில், கட்டுமான நிறுவனத்துக்கு செல்லும்.

இந்த, 15 சதவீதம் போக மீதியுள்ள பரப்பளவு தான் வீட்டின் பயன்பாட்டுக்கு கிடைக்கும். இதில், காமன் ஏரியாவுக்கான பங்கு விகிதத்தை, பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அவசியம்
இது குறித்து, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்க கூட்டமைப்பு தலைவர் மணிசங்கர் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட துவங்கியது முதல் விற்பனைக்கான பரப்பளவில், 15 சதவீதம்தான் காமன் ஏரியாவாக கணக்கிடப்பட்டு வந்தது.
தற்போது, அதிக வீடுகள் அடங்கிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், காமன் ஏரியா விகிதத்தை, 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
சென்னையில் சில பிரபல நிறுவனங்கள், விற்பனை பரப்பளவில் சூப்பர் பில்டப் ஏரியாவுக்கான சதவீதத்தை அதிகரித்துள்ளன.
பொது இடங்களுடன், அந்த குடியிருப்பில் ஏற்படுத்தப்படும் சிறப்பு வசதிகளுக்காக இப்படி செய்யப்படுவதாக கூறினாலும், மக்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டால், 'விற்பனையின்போது, வீட்டின் கார்ப்பெட் ஏரியா எவ்வளவு என்று தெரிவிக்க மட்டுமே, சட்டத்தில் உள்ளது. விற்பனை பரப்பளவில், காமன் ஏரியா எவ்வளவு இருக்க வேண்டும் என்ற வரையறை வகுக்கப்படவில்லை' என்று கூறுகின்றனர்.
இது விஷயத்தில் அரசு தலையிட்டு, வீடுகளின் விற்பனை பரப்பளவில், காமன் ஏரியா அளவுக்கான வரையறையை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக செலவு ஏன்?
ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின்போது, சுவர்களுக்கு இடைப்பட்ட பரப்பளவு என்ன; சுவர்களுடன் சேர்த்த பரப்பளவு என்ன; காமன் ஏரியாவுக்கான விகிதம் என்ன என்பதை கட்டுமான நிறுவனங்கள் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.
பொது மக்கள் சதுர அடிக்கு விலை என்ன; மொத்த விலை என்ன; காமன் ஏரியாவுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறோம் என்பதில், விழிப்புடன் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலான வீடுகள் உள்ள குடியிருப்புகளில், 15 சதவீதமாக காமன் ஏரியாவை கணக்கிடுவதே நியாயமானதாக இருக்கும்.
இதை கட்டுமான நிறுவனங்கள் கடைப்பிடிப்பதை அரசும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுமான துறையினர் கூறியதாவது:அடுக்குமாடி குடியிருப்புகளில், மாடிப்படி, மேல் தளத்தில் படிக்கட்டுகள் இணையும் இடமான 'ெஹட் ரூம்', மேல்நிலை தண்ணீர் தேக்க தொட்டி, அடித்தள பகுதி ஆகியவை, 'காமன் ஏரியா' அல்லது 'சூப்பர் பில்டப் ஏரியா' என்றும் குறிப்பிடப்படுகிறது.உதாரணமாக, 2,400 சதுர அடி நிலத்தில், 4,800 சதுர அடி பரப்பளவில், ஆறு வீடுகள் கட்டும்போது, 500 சதுர அடி தான் காமன் ஏரியாவாக வரும்.
இந்த, 500 சதுர அடிக்கான கட்டுமான செலவை, வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்தால், விலையில் சுமை ஏற்படுவதை தடுக்கலாம்.ஆனால், இதை ஒவ்வொரு வீட்டின் விற்பனை பரப்பளவில், 27 சதவீதம் என்று கணக்கிடும்போது, 900 சதுர அடிக்கு பணம் கொடுத்து வீடு வாங்கும் ஒவ்வொருவருக்கும், 243 சதுர அடி குறைவாக தான் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.