வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:எலக்ட்ரிக் வாகன 'சார்ஜிங்' மையங்களுக்கு, ஒரே நாளில் மூன்று வித கட்டணத்துக்கு பதில், அதை குறைத்து, ஒரே கட்டணமாக நிர்ணயிக்குமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, மின் வாரியத்திடம், ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்., 10 முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதில், எலக்ட்ரிக் வாகன பொது சார்ஜிங் மையங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் மின் கட்டணம்
காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையும்; இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணி வரையும் யூனிட்டுக்கு, 8 ரூபாய் கட்டணம்

மாலை, 6:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை யூனிட்டுக்கு, 12 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, சேவை கட்டணமாக 1 கிலோ வாட்டுக்கு மாதம், 550 ரூபாய் செலுத்த வேண்டும்
எலக்ட்ரிக் வாகனத்தை வீட்டில் சார்ஜிங் செய்யும்போது, அந்த பிரிவுக்கான கட்டணம் செலுத்தலாம்.
வரிச்சலுகையால் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலை பாதிக்காத 'பேட்டரி'யில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு காரை சார்ஜிங் செய்ய, காரின் மாடலை பொறுத்து, 15 யூனிட் முதல் 30 யூனிட் வரை மின்சாரம் தேவை. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கி.மீ., முதல், 300 கி.மீ., வரை செல்லும். சார்ஜிங் மையங்களில் வாகனத்தை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு, 15 ரூபாய் முதல் கட்டணம் பெறப்படுகிறது.
இந்த கட்டணம், மற்ற மாநிலங்களில், யூனிட்டுக்கு 7 ரூபாய் வரை தான் உள்ளது. எனவே, தமிழகத்திலும் சார்ஜிங் மைய கட்டணத்தை குறைக்குமாறு, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொது சார்ஜிங் மையங்களுக்கு, இந்த முறை தான் புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கட்டணத்தை குறைக்கக் கோரி, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வாகன ஓட்டிகள் என, பல தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, எவ்வளவு சார்ஜிங் மையங்கள் உள்ளன, அவற்றின் மின் பயன்பாடு எவ்வளவு என்பது தொடர்பாக மின் வாரியத்திடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த கட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.